பிரச்சினைகளுக்கு தீர்வு நம்மிடமே...! - ரம்யா


பிரச்சினைகளுக்கு தீர்வு நம்மிடமே...! - ரம்யா
x
தினத்தந்தி 30 Oct 2022 1:30 AM GMT (Updated: 30 Oct 2022 1:31 AM GMT)

கணவருடன் இருந்த கருத்து வேறுபாட்டை அவருடன் மனம்விட்டு பேசி சரி செய்தேன். அதன்பிறகு தான் ‘நமது வாழ்க்கையில் நடக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு நம்மிடமே இருக்கிறது. நிதானமாக யோசித்து அணுகினால் எல்லாவற்றையும் சுமுகமாக மாற்ற முடியும்’ என்ற உண்மையை புரிந்து கொண்டேன்.

ரு வீட்டில் புதிதாக குழந்தை பிறப்பது, அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் மற்றும் உறவுகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதே சமயம் பிரசவித்த தாய்க்கு குழந்தை பிறப்பு உற்சாகம், மகிழ்ச்சி, பயம், பதற்றம், குழப்பம், அழுகை, எரிச்சல் போன்ற பலவித மனநிலை மாற்றங்களை உண்டாக்கும். இத்தகைய நிலை பிரசவித்த முதல் இரண்டு அல்லது மூன்று நாளில் ஆரம்பித்து சில வாரங்கள் வரை நீடிக்கும். சிலர் இதனால் தீவிரமாக பாதிக்கப்படுவதும் உண்டு.

அவ்வாறு தனக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை வெற்றிகரமாகக் கடந்து வந்ததோடு மட்டுமில்லாமல், நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, தன்னைப் போன்ற மற்ற தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு பற்றிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார் ரம்யா சுந்தர். 'பாரா மெடிக்கல்' படித்திருக்கும் இவர், சென்னை, கோவிலம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது பேட்டி.

"எனது மகனுக்கு தற்போது 8 வயது ஆகிறது. அவன் பிறந்த சில நாட்களில் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. காரணம் இல்லாமல் சோகமாகவும், கோபமாகவும், வெறுமையாகவும், எரிச்சலாகவும் உணர்ந்தேன். வேலைக்கு போனால் இந்த நிலை மாறும் என்று நினைத்து பணியில் சேர்ந்தேன். ஆனால் பிரச்சினை குறையவில்லை. குழந்தை வளர்ந்த பிறகும் நீடித்தது.

'வீட்டிலும், பணியிடத்திலும் எனக்கு மற்றவர்கள் மரியாதை கொடுக்கவில்லை' என்று நானாகவே நினைத்துக் கொண்டேன். குழந்தை, கணவர், வேலை, என்னுடைய ஆரோக்கியம் என எதையும் கவனிக்க முடியவில்லை. 'பணியிடத்தில் இருக்கும்போது குழந்தையைப் பற்றியும், வீட்டில் அலுவலக வேலைகளைப் பற்றியும்' நினைத்துக்கொண்டு இருந்தேன். இந்த நிலை எனக்கு குற்ற உணர்வை உண்டாக்கியது. கைகளில் 'எக்ஸிமா' என்ற மன அழுத்தத்தால் ஏற்படும் தோல் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் என்னை நானே தாழ்த்திக் கொண்டேன். 'என்னால் எதையுமே சரியாக செய்ய முடியாது' என்ற எண்ணத்தை எனக்குள்ளே உருவாக்கிக் கொண்டேன்.

பிறகு 'இந்த நிலையில் இருந்து மீண்டு வரவேண்டும்' என்று எனக்குள் உறுதி எடுத்துக்கொண்டேன். வீட்டிலேயே எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஈடுபட்டேன். விழித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுதுவதில் உதவுவது, பேட்மிண்டன் விளையாடுவது என எனக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருந்தபோதுதான் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்டது. எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. காலையில் 5 மணிக்கு எழும் சவாலிலும் கலந்து கொண்டேன். அது என் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.

உணவு முறையை மாற்றி அமைத்து உடல் எடையைக் கணிசமாக குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தினேன். என்னுடைய தோல் பிரச்சினையும் சரியாகிவிடும் என்று தினந்தோறும் 'எனக்குள்ளேயே காட்சிப்படுத்துதல்' எனும் யுக்தியை பயன்படுத்தி என் கை மிருதுவாக இருப்பது போல தினமும் காட்சிப்படுத்துவேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு எனது கை குணமடைந்தது.


கணவருடன் இருந்த கருத்து வேறுபாட்டை அவருடன் மனம்விட்டு பேசி சரி செய்தேன். அதன்பிறகு தான் 'நமது வாழ்க்கையில் நடக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு நம்மிடமே இருக்கிறது. நிதானமாக யோசித்து அணுகினால் எல்லாவற்றையும் சுமுகமாக மாற்ற முடியும்' என்ற உண்மையை புரிந்து கொண்டேன். 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பல விஷயங்களை கற்றுக் கொண்டு என்னை மேம்படுத்திக் கொண்டேன். எனக்கு கிடைத்த அனைத்தும் என்னைப்போன்ற தாய்மார்களுக்கு ஒரே இடத்தில் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சிந்தித்து 'ஹாப்பி மாம்ஸ் கிளப்'பை ஆரம்பித்தேன்.

ஒரு குழந்தை, தனது வாழ்க்கையில் பெரும்பாலான விஷயங்களை தாயிடம் இருந்தே கற்றுக்கொள்கிறது. 'வீட்டில் தனது அம்மா எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கிறார், ஒவ்வொரு சூழ்நிலையையும் எவ்வாறு எதிர்கொள்கிறார்?' என்பதை பார்க்கும் குழந்தைகள், தாங்களும் அவ்வாறே நடந்துகொள்வார்கள்.

எனவே குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், திறமையாகவும் வளர வேண்டும் என்றால், முதலில் அம்மா அவ்வாறு தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இன்றைய அம்மாக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் என்ன?

உடல் ஆரோக்கியம், கணவருடன் சுமுக உறவை வளர்ப்பது, குழந்தை வளர்ப்பு, பணியிடத்தையும், வீட்டையும் சமநிலையில் வைத்தல், கணவரின் குடும்பத்தினருடன் சீரான உறவை மேம்படுத்துதல் போன்றவற்றில் பல பிரச்சினைகளை இன்றைய தாய்மார்கள் சந்திக்கிறார்கள். இவற்றுக்கு ஒரே தீர்வு அவர்களின் நம்பிக்கை தான். தங்கள் மேல் சுயமரியாதையும், சுய அன்பும் காட்டினாலே இந்த பிரச்சினைகளை எளிதாக தீர்த்து விடலாம்.

தாய்மார்கள் மன அழுத்தத்தில் இருந்து மீள்வது எப்படி?

எந்தப் பிரச்சினையையும் மேலோட்டமாக பார்க்காமல், அதற்கான காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும். நமக்கு ஏன் மன அழுத்தம் ஏற்படுகிறது, நாம் ஏன் சோர்வாக உணர்கிறோம்? என்று பிரச்சினையை ஆராய்ந்து சிந்தித்து ஒரு தீர்வை உண்டாக்கி, அதை தொடர்ந்து பயிற்சி செய்தாலே மனஅழுத்தத்தில் இருந்து மீண்டு வரலாம். தங்களுக்கு பிடித்த விஷயங்கள், ஆசைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் தாய்மார்களின் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும், சந்தோஷமும் அதிகரிக்கும்.

ஒரு குழந்தை பிறந்த பிறகு, நீங்கள் முழுவதுமாக மாறிவிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நல்ல மனைவியாக, நல்ல தாயாக, வேலையையும் நன்றாக செய்ய வேண்டுமென்றால், நீங்கள் நீங்களாகவே இருங்கள். முதலில் உங்கள் மனநலத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், உங்கள் குடும்பமும் சந்தோஷமாக இருக்கும்.


Next Story