கலையை போற்றும் பெண்


சுற்றுலாப் பற்றிய தொடர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. அப்போது எனது நண்பர் மூலமாக, பின்னணி பேசுவதற்கு புதிய குரல் ஒன்று வேண்டும் என கேட்டிருந்தனர். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்தத் தொடரின் இடையில் இரண்டு தடவை பாடுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது.

சென்னையில் 25 வருடங்களாக இசைப்பள்ளி நடத்தி வருகிறார், நிகிலா ஷியாம் சுந்தர். சின்னத்திரைக்கு பின்னணி குரல் கொடுப்பது, பிரபலங்களை நேர்காணல் செய்வது, சேலை கட்டுவதற்கு பெண்களுக்குப் பயிற்சி அளிப்பது, சுற்றுச் சூழலுக்கு நட்பான ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் விற்பனையகத்தை நடத்துவது என பல தளங்களில் இயங்கி வருகிறார்.

மேலும், தமிழ்க் கவிதைகளை குன்னக்குடி வைத்தியநாதனின் இசை அமைப்பில் பாடி, அதை குறுந்தகடாக தயாரித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமிடம் வழங்கியவர். எம்.எஸ்.சுப்புலெட்சுமியிடம் பாராட்டுப் பெற்றவர் என பல சிறப்புகளைக் கொண்டவர்.

அவரிடம் பேசியதிலிருந்து…

உங்களுடைய இசைப்பயணம் பற்றி கூறுங்கள்?

1991-ம் ஆண்டு முதலே, வாய்ப்பாட்டு வகுப்புகள் எடுக்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக இசைப்பள்ளியை நடத்தி வருகிறேன். இதில் புகழ்வாய்ந்த இசைக்கலைஞர்களின் கச்சேரிகள் நடப்பதுண்டு. 'கற்றுக் கொள்வதற்கு வயது வரம்பு தேவையில்லை, ஆசையிருந்தால் மட்டும் போதும்' என்பதுதான் நான் பெரியவர்களுக்கு சொல்வது. குழந்தைகள் எது சொன்னாலும் புரிந்து கொள்வார்கள். எனவே குழந்தைகளுக்கு முறையான கர்நாடக சங்கீதம் சொல்லித் தருகிறேன். என் கணவர் மிருதங்கம் வகுப்புகள் எடுக்கிறார். அவர் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளர், மூத்த இசைக்கலைஞர்.

சின்னத்திரையில் பின்னணி குரல் கொடுப்பது குறித்து?

சுற்றுலாப் பற்றிய தொடர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. அப்போது எனது நண்பர் மூலமாக, பின்னணி பேசுவதற்கு புதிய குரல் ஒன்று வேண்டும் என கேட்டிருந்தனர். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்தத் தொடரின் இடையில் இரண்டு தடவை பாடுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இது தவிர சில தனியார் தொலைக்காட்சிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் நானும், என்னுடைய மகளும் சேர்ந்து பரிசு பெற்றுள்ளோம். சமையல் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன்.

சேலை கட்டுவதற்கு பயிற்சி கொடுத்தது பற்றி?

என் மகள் கல்லூரியில் படித்தபோது, நிகழ்ச்சிக்காக அவளுக்கு சேலை கட்டிவிட்டேன். அதைப்பார்த்து வியந்த அவளது தோழிகள் மற்றும் சக மாணவிகள், சேலை கட்டுவதற்கு கற்றுக்கொள்ள விரும்புவதாக, என் மகள் மூலம் அறிந்தேன். அதனால் முகநூலில் ஒரு பக்கத்தை உருவாக்கி, அதில் ஒவ்வொரு நாளும் ஒரு சேலையை அறிமுகம் செய்ததோடு, அதை எவ்வாறு அணிவது என்று காணொலிகளுடன் சேர்த்து பதிவு செய்தேன். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இவற்றைப் பார்த்த சிகையலங்காரக் கலைஞர் ஒருவர் பரிந்துரைத்ததன் பேரில் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடிக்கும் பெண்கள், சினிமாத் துறையில் உள்ள பெண்களுக்கும் சேலை கட்டி விட்டிருக்கிறேன். ஒரு சேலையை, பல விதமாகக் கட்டுவதைப் பற்றி எடுத்துரைப்பது அவசியம். இதுவரைக்கும் ஆயிரம் பேருக்கு மேல் சேலை கட்டி விட்டிருக்கிறேன். 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன்.

நடனக் கலையில் பங்கு பெறுபவர்களுக்கு, சேலையை மிக நேர்த்தியாக கட்ட வேண்டும். ஏனென்றால், ஒரு அரங்கேற்ற நிகழ்வு 5 மணி நேரம் கூட நடக்கலாம். அவ்வாறு நடக்கும்போது சேலை விலகக்கூடாது. அதில் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் பொழுதுபோக்கு என்ன?

கணவரின் இஷ்ட தெய்வமான ராமர் படங்களை, விளையாட்டாக சேகரிக்க ஆரம்பித்தேன். பின்னர் அதில் ஏற்பட்ட ஈடுபாடு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலை வடிவங்களை தேடிச் செல்ல தூண்டு கோலாக அமைந்தது. தஞ்சாவூர் ஓவியங்கள், மரத்தில் தீட்டப்பட்ட வண்ண ஓவியம், மதுபானி, சாஞ்சி, திக்குலி, காலிகாரட் வார்லி என பல விதமான ஓவியங்கள் பற்றி அறிந்து கொண்டேன்.

மேலும் பழங்குடி மக்களின் கலைப் படைப்புகளையும் தேடிக் கண்டறிய வேண்டும் என்ற ஆசை உண்டானது. அவற்றில் பல அழியும் நிலையில் இருந்தது. அவற்றைப் படைக்கக்கூடிய கலைஞர்களையும் கண்டறிந்து, அவர்களிடம் வடிவங்களின் அமைப்புகளை விளக்கி, மனதிற்கு உகந்தவாறு செய்து வாங்குவது மிகுந்த சவாலான விஷயமாக இருந்தது. அதிலும் அவ்வகையில் செய்யப்பட்ட கலை வடிவங்களில், ஒரே மாதிரியாக இல்லாமல், ஒன்றிலிருந்து மற்றது மாறுபட்டதாக இருக்கவும் பெரும் முயற்சி மேற்கொண்டேன்.

இவ்வாறு செய்து தரப்பட்டவை, சில நேரங்களில் வெகு தொலைவில் இருந்து அஞ்சல் மூலமாக வருவதால் பழுதின்றி வந்து சேர்வது சவாலாக இருந்தது. அப்படி பழுது பட்டு இருந்தால், அவற்றை சரி செய்து வாங்குவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது.

108 கலைப் படைப்புகள் மட்டும் சேகரித்தால் போதும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், ஒவ்வொன்றாக தேடும் போதும் வேறு விதமாக அமைய, இதுவரை 170 வகையான கலை வடிவங்களை சேர்த்திருக்கிறேன்.


Next Story