மனதை அமைதியாக்கும் 'ஜென்டாங்கிள் ஓவியங்கள்'


மனதை அமைதியாக்கும் ஜென்டாங்கிள் ஓவியங்கள்
x
தினத்தந்தி 6 Nov 2022 1:30 AM GMT (Updated: 6 Nov 2022 1:31 AM GMT)

மனப்பதற்றம், பயம், மனச்சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மனநலனை ‘ஜென்டாங்கிள் ஓவியங்கள்’ மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

'ஜென்டாங்கிள்' என்பது தியானமும், கலையும் சேர்ந்த அழகான ஓவியம். இதன் தனித்தன்மையே எவரும் சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம் என்பதுதான். இவை குறியீட்டு வகை ஓவியங்கள். இவற்றை வரையப் பயன்படுத்தப்படும் 9×9 செ.மீ நீள அகலம் கொண்ட காகிதத்தை 'டைல்ஸ்' என்று குறிப்பிடுவார்கள். இதில் ஒரே மாதிரியில் வடிவங்களைப் பென்சில் அல்லது கறுப்பு நிற மை நிரப்பப்பட்ட மெல்லிய பேனாக்களால் வரைய வேண்டும். இவற்றை வரையும்போது 'அழிப்பான்கள்' பயன்படுத்தப்படுவதில்லை. வரையும்போது செய்யும் தவறுகள், புதிய கற்பனைக்கு இட்டுச்செல்லும் என்பது 'ஜென்டாங்கிள்' தத்துவம்.

'ஓவியத்தின் இறுதி வடிவம் எவ்வாறு வருமோ?' என கவலைப்படாமல் 15 நிமிடங்களில் ஒரு ஓவியத்தை வரைந்து முடித்து விடலாம் என்பது இதன் சிறப்பம்சம். இதனை வரைய ஆர்வம் மட்டும் போதும். எவ்வித தனித் திறமையும் தேவையில்லை. எந்த வயதினரும் 'ஜென்டாங்கிள்' ஓவியங்களை வரைவதற்கு கற்றுக்கொள்ளலாம்.

ஜென்டாங்கிள் ஓவியங்கள் வரைவதால் உண்டாகும் நன்மைகள்

* பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தும் திறன் மேம்படும். கைகளுக்கும், கண்களுக்குமான ஒத்திசைவு அதிகரிக்கும்.

* மனம் மற்றும் உடல் சார்ந்த பல நோய்களுக்கு இதனை சிகிச்சையாகப் பரிந்துரைக்கலாம்.

* மனப்பதற்றம், பயம், மனச்சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மனநலனை 'ஜென்டாங்கிள் ஓவியங்கள்' மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* தூக்கமின்மை, ஹைப்பர் ஆக்டிவிட்டி, கவனம் இல்லாமை, வலி, வேலை டென்ஷன் போன்ற பிரச்சினைகளுக்கும் இந்தக் கலை தீர்வாக இருக்கும்.

* எளிதாக இருக்கும் ஒரே டிசைனை, கவனத்துடன் வரையும்போது மனம் தியான நிலைக்குச் சென்று அமைதியாகும்.

* 'ஜென்டாங்கிள் ஓவியங்கள்' ஒருவருடைய மனதின் விழிப்பு நிலையை அதிகரிக்கும்.

* புள்ளி, வட்டம், எஸ் வடிவக் கோடுகள், வளைவுகள் மற்றும் பல்வேறு கோடுகள் என்ற ஐந்து அடிப்படை வடிவங்களை உள்ளடக்கிய ஜென்டாங்கிள் ஓவியங்களை வரைவதன் மூலம் கற்பனைத் திறன் மேம்படும்.

இதன் நன்மைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. 'வாழ்க்கை ஒரு கலை வடிவம், அதில் நாம் ஒவ்வொருவருமே கலைஞர்கள்' என்ற அடிப்படையில் 'ஜென்டாங்கிள் ஓவியங்கள்' அனைவருக்குமான பயன்பாடுமிக்க கலையாகும்.


Next Story