வயர்லெஸ் இயர்பட்களை வாங்குவதற்கான ஆலோசனைகள்
இயர்பட்களின் வடிவமைப்பு முக்கியமானது. அவை காதுகளில் சரியாக பொருந்துமாறு பார்த்து வாங்க வேண்டும். இயர்பட்களின் மொட்டுகள் பெரியதாக இருந்தால், காதுகளில் உறுத்தலை உண்டாக்கக்கூடும். சிறியதாக இருந்தால், அவை காதுகளில் இருந்து விழக்கூடும்.
உலகை நம் கைக்குள் அடக்கிவிடும் மொபைல் போன் பயன்பாட்டை மேலும் எளிதாக்குவதற்கு உதவும் தொழில்நுட்பம்தான் 'வயர்லெஸ் இயர்பட்கள்'. இதில், பல வகைகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன.
தரமற்ற இயர்பட்களைப் பயன்படுத்தும் போது, அவை காதுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க இயர்பட்களை வாங்கும்போது, நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இதோ:
தரம்:
வயர்லெஸ் இயர்பட்கள் வாங்கும்போது தரத்தை உறுதி செய்ய வேண்டும். தரமானப் பொருட்கள் பல ஆண்டுகள் நீடித்து உழைக்கும் தன்மையும், சிறந்த ஒலி மற்றும் காதுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத உதிரிப் பாகங்களை கொண்டதாகவும் இருக்கும். பழுது ஏற்பட்டாலும், அதை உடனடியாகச் சரி செய்து, தரமான உதிரிப் பாகங்களை மாற்றமுடியுமா என்பதை கவனிக்க வேண்டும்.
வடிவமைப்பு:
இயர்பட்களின் வடிவமைப்பு முக்கியமானது. அவை காதுகளில் சரியாக பொருந்துமாறு பார்த்து வாங்க வேண்டும். இயர்பட்களின் மொட்டுகள் பெரியதாக இருந்தால், காதுகளில் உறுத்தலை உண்டாக்கக்கூடும். சிறியதாக இருந்தால், அவை காதுகளில் இருந்து விழக்கூடும்.
பிளாஸ்டிக் இயர்பட்கள், அணிவது கடினமாக இருக்கலாம். சிலிகான் இயர்பட்கள், காதுகளில் சரிவரப் பொருந்தாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஜிம் அல்லது ஓட்டப் பயிற்சியின்போது உபயோகிப்பதற்கு, தரமான தொழில்நுட்பம் கொண்ட இயர்பட்களைப் பயன்படுத்த வேண்டும்.
அம்சங்கள்:
நம்முடைய தேவையைப் பொறுத்து, வயர்லெஸ் இயர்பட்களில் கிடைக்கும் அம்சங்களைத் தேர்ந்தெடுக்கலாம். வாட்டர் புரூப் தன்மை, இசையை இசைக்கச் செய்வது, அழைப்புகளைக் கட்டுப்படுத்தும் திறன், குரல் உதவியை இயக்கச் செய்வது, விரைவான இணைப்பு ஆகியவற்றை கவனிக்க வேண்டும். தொடுதல் வசதி கொண்ட வகைகள் பயன்படுத்தும் போது, கவனக்குறைவால் அதன் பயன்பாடு பாதிக்காமல் இருக்க வேண்டும்.
பேட்டரி வாழ்நாள்:
நாம் பயன்படுத்தும் இயர்பட்கள், அடிக்கடி சார்ஜ் செய்வதாக இருந்தால் எளிதில் அதன் தரம் குறைந்து, பழுதடைய வாய்ப்புள்ளது. இவை அதிக சூடாகி காதுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, குறைந்தபட்சம் 4 முதல் 5 மணி நேரம் தாங்கக்கூடிய பேட்டரிகளை கொண்டிருக்க வேண்டும். பேட்டரிகள் அடிக்கடி பழுதடையாமல், எளிதில் சார்ஜ் ஆகும் வகையில் தரமானதாக இருக்க வேண்டும்.