மாறுதல் தரும் மலையேற்றம்


மாறுதல் தரும் மலையேற்றம்
x
தினத்தந்தி 19 Jun 2022 1:30 AM GMT (Updated: 19 Jun 2022 1:30 AM GMT)

ஐந்து கிலோ எடையுள்ள பொருளை தூக்கிக்கொண்டு மாடிப் படிகளில் ஏறுவதற்கு பழகிக்கொள்ளலாம். ஏனெனில் மலையேற்றம் செய்யும்போது உங்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் நீங்களே சுமந்து செல்ல வேண்டியிருக்கும். அதற்கு இந்தப் பயிற்சி உதவும்.

குடும்ப நிர்வாகம், வேலை, குழந்தைகள் பராமரிப்பு என்றே நகர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு, மாறுதலாக அமைவதுதான் மலையேற்றம். இயற்கை சூழ்நிலைகள், உயர்ந்த மலைகளின் பிரமாண்ட அழகு, இதுவரை பார்த்திராத சவால்கள் நிறைந்த பாதைகள் என புதிய அனுபவத்தை பெற முடியும். தற்போது மலையேற்றத்துக்கு அழைத்து செல்வதற்காக பல அமைப்புகள் செயல்படுகின்றன. அவர்களை அணுகி தனியாகவோ, நண்பர்களுடனோ பாதுகாப்பான மலையேற்ற பயணம் செல்லலாம்.

மலையேற்றம் செய்வதால் பெண்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். இயற்கையின் அழகில் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் கிடைக்கும். பிறரைச் சார்ந்து செயல்படாமல் தனியாக செயல்படுவதற்கான உத்வேகம் பிறக்கும்.

அவ்வாறு, மலையேற்றப் பயிற்சிக்கு செல்வதற்கு முன்பு, முன்னேற்பாட்டு செயல்களை செய்ய வேண்டியது அவசியம். அவை என்னவென்று இந்த தொகுப்பில் அறிவோம்.

உடல் அளவில் தயார் செய்தல்:

மலையேற்றம் மிகவும் எளிதாக செய்யக்கூடிய காரியம் இல்லை. அதற்கு முன்னதாகவே உடலையும், மனதையும் தயார் செய்ய வேண்டும். மலையேற்றத்துக்கான நாளை நீங்கள் பதிவு செய்வதற்கு, ஒரு சில மாதங்களுக்கு முன்பாக இருந்தே அதற்கான பயிற்சிகளை தொடங்க வேண்டும்.

மலைப் பகுதிகளின் பருவ நிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அதிகப்படியான வெப்பம், மழை, குளிர் போன்ற வானிலை அங்கு சாதாரணமானது. எனவே அதை சமாளிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும். அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், மாடிப் படிகளில் ஏறி இறங்குதல் போன்ற பயிற்சிகள் முக்கியமானவை.

ஐந்து கிலோ எடையுள்ள பொருளை தூக்கிக்கொண்டு மாடிப் படிகளில் ஏறுவதற்கு பழகிக்கொள்ளலாம். ஏனெனில் மலையேற்றம் செய்யும்போது உங்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் நீங்களே சுமந்து செல்ல வேண்டியிருக்கும். அதற்கு இந்தப் பயிற்சி உதவும்.

மூச்சுப் பயிற்சிகளை பழகிக்கொள்வதும் சிறந்தது. அதன் மூலம் மலையேற்றம் எளிதாகும். கால்களை வலுப்படுத்தும் சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்வதும் பயன் தரும்.

எடுத்துச் செல்ல வேண்டியவை:

குளிரைத் தாங்கும் உடைகள், மழைக்கோட்டுகள், தரமான காலணி, குளிர் கண்ணாடி, தண்ணீர் பாட்டில், ஊன்றுகோல் போன்றவற்றை தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும். அடையாள அட்டைகள், முக்கியமான தொலைபேசி எண்கள் போன்றவற்றையும் உடன் வைத்திருக்க வேண்டும். எளிதில் கெட்டுப்போகாத எடை குறைந்த உணவுகளையும் கொண்டு செல்லலாம்.

சரியான வழிகாட்டும் நிறுவனத்தை தேர்வு செய்தல்:

நீங்கள் செல்லும் பகுதியைப் பற்றி நன்றாக அறிந்த வழிகாட்டியைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானது. மலைப் பகுதிகளில் வானிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லுதல், உணவு மற்றும் மருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சரியான கருவிகளை அமைத்துக்கொடுத்தல் போன்ற முழுமையான வசதிகள் கொண்ட நபர்களை தேர்ந்தெடுப்பது அவசியம்.

பொறுப்புணர்வு:

இயற்கையின் வளங்கள் முழுமையாக நிறைந்த மலைப்பகுதியை, மாசுபடுத்தாமல் நடந்துகொள்வது முக்கியமானது. பிளாஸ்டிக் மற்றும் தீங்கு ஏற்படுத்தும் பொருட்களை நீர்நிலைகளில் எறிவது, மண்ணில் புதைப்பது கூடாது. மலைப்பகுதிகளில் நெருப்பு மூட்டும்போது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். தேவையற்ற சத்தங்கள் எழுப்பி அங்கு வசிக்கும் மற்ற உயிர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.


Next Story