கடையம் வில்வவனநாதர் கோவில்


குழந்தை இல்லாத தம்பதிகள் வில்வவனநாதர் கோவிலுக்கு வந்து சுனையில் நீராடி குழந்தை வரம் வேண்டினால் அவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம்.

தென்காசி

தென்றல் தவழும் தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அமைந்திருக்கிறது, நித்யகல்யாணி அம்மன் உடனுறை வில்வவனநாதர் கோவில். இங்கு சிவபெருமான் வில்வவனநாதராகவும், பார்வதி தேவி நித்யகல்யாணி அம்பாளாகவும் அருள்பாலிக்கின்றனர்.

ஒரு காலத்தில் நித்யகல்யாணி அம்பாள் கிழக்கு பார்த்த முகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நிலையில், மிகவும் உக்கிரமாக காணப்பட்டார். இதனால் காலை வேளையில் மட்டுமே அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து நம்பூதிரிகள் வரவழைக்கப்பட்டு, அம்மனை தெற்கு பார்த்த முகமாக பிரதிஷ்டை செய்தனர். அதன்பிறகு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று வரலாறு கூறுகிறது.

ஆலயத்தில் சுப்பிரமணியர், வள்ளி - தெய்வானை அம்பாள்களுடனும், தட்சிணாமூர்த்தி, 18 சித்தர்கள், மகாலட்சுமி, கஜலட்சுமி ஆகியோரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

அதிசய வில்வமரம்

சிவனுக்கு மிகவும் பிடித்தமான அர்ச்சனை பொருள் வில்வம். அந்த வில்வத்தையே சுவாமி இங்கு தனது பெயராக சூடிக்கொண்டார். சிவபெருமான் வழங்கிய வில்வ பழத்தை பெற்றுக்கொண்ட பிரம்மதேவர், அதனை மூன்றாக உடைத்தார். அதில் ஒன்றை கைலாய மலையிலும், இன்னொன்றை பாரதத்தின் நடுவிலுள்ள மேருமலையிலும், மற்றொன்றை தென்பொதிகை சாரலிலுள்ள துவாத சாந்தவனத்திலும் நட்டார். அந்த துவாத சாந்தவனப் பகுதியில் தான் வில்வவனநாதர் கோவில் உள்ளது.

தேவர்கள் நீர் பாய்ச்சி இந்த மரத்தை வளர்த்தனர். தற்போது கோவிலுக்குள் உள்ள வில்வமரத்தில் எப்போதாவதுதான் காய் காய்க்கும். இதை எடுத்து உடைத்தால் உள்ளே சிவலிங்க பாணம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் சிலருக்கு இந்த காய் கிடைத்துள்ளது. அவற்றை அவர்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.

சாபம் நீங்கிய தசரதர்

காபிலோ புராணத்தில் இந்த தலத்தின் வரலாறு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தேவர்களுக்கும், கம்பாசுரனுக்கும் நிகழ்ந்த யுத்தத்தின்போது, தேவேந்திரனுக்கு உதவியாக அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜா சென்றார். அசுரர்கள் பலரைக் கொன்றார். இதனால் தனக்கு தோஷம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதிய அவர் தென்னகத்துக்கு வந்து, அகத்தியரால் உருவாக்கப்பட்ட தத்துவசாரா நதியில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். அந்த நதிக்கரையில் சுயம்புவாக எழுந்தருளிய வில்வவனநாதரை அவர் வணங்கினார். அவரது அருளால் ஸ்ரீமன் நாராயணனே அவருக்கு புத்திரராக பிறந்தார்.

அயோத்தியில் ராமராஜ்ஜியம் நடந்தபோது, அகால மரணமே யாருக்கும் ஏற்படவில்லை. இதைக்கண்டு பொறாமைப்பட்ட சம்புகன் என்ற கொடியவன், ‘அங்கே அகால மரணம் ஏற்பட வேண்டும்’ என இறைவனை வேண்டி தவம் செய்தான். அவனை ராமபிரான் கொன்றுவிட்டார்.

அந்த தோஷம் நீங்குவதற்காக அவர் தத்துவசாரா நதியில் நீராடி, வில்வவனநாதரையும், அவரது தேவியான நித்ய கல்யாணி அம்பாளையும் வணங்கினார். ராமபிரான் நீராடிய பிறகு, இந்த நதிக்கு ‘ராமநதி' என்ற பெயர் ஏற்பட்டது. இப்போதும் இந்த பெயரிலேயே இந்த நதி ஓடிக் கொண்டிருக்கிறது.

வழிபாடு

கிருதயுகத்தில், கயிலாயத்தில் பிரம்மா சிவபெருமானை நோக்கி தவம் செய்தார். தசரத மன்னர் வேட்டைக்கு சென்றிருந்தபோது சிரவணன் என்ற இளைஞர் கண் தெரியாத பெற்றோரை தனது தோளில் சுமந்து கொண்டு காட்டு வழியில் நடந்து சென்றார். நித்யகல்யாணி வில்வவனநாதர் கோவில் அருகே வந்தபோது, அங்கு ஒரு சுனை ஓடுவதைக் கண்டு நீர் அருந்த சென்றார் அந்த இளைஞர். அச்சமயம் தசரத மன்னர் மிருகம் தண்ணீர் அருந்துவதாக எண்ணி அம்பு எய்ய, தண்ணீர் அருந்திக்கொண்டிருந்த இளைஞன் மீது அம்பு பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார்.

இதனை அறிந்து அவனது பெற்றோர், ‘‘வயதான காலத்தில் புத்திர சோகத்தினால் மாண்டு போவாய்’’ என்று தசரதனுக்கு சாபம் கொடுத்தனர். இதனைக் கேட்டு மனம் நொந்து போன மன்னர் இக்கோவிலுக்கு வந்து புத்திரதோஷம் நீங்க வில்வவனநாதரை மனமுருகி வேண்டி வழிபட்டார். இதனை பறைசாற்றும் விதமாக இன்றும் இக்கோவிலில் சுனை தீர்த்தம் உள்ளது. இக்கோவிலைச் சுற்றி எப்பொழுதும் அமைதியாகவே காணப்படுகிறது.

பிரார்த்தனை

குழந்தை இல்லாத தம்பதிகள் இங்கு வந்து சுனையில் நீராடி குழந்தை வரம் வேண்டினால் அவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம். தசரதரின் சாபவிமோசனம் நீங்கப்பெற்று புத்திரபாக்கியம் பெற்ற தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது.

ராவண வதத்திற்கு முன், வனவாச காலத்தில் அகத்தியரால் வழிகாட்டப்பட்டு, ராமபிரான் பூஜை செய்து சிவனருள் கிடைக்கப் பெற்றது இத்தலம். இங்கு சித்திரை மாதத்தில் பெரும் திருவிழாவாக தேரோட்டம் நடைபெறுகிறது. ஆவணி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் தெப்ப திருவிழாவும், ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணமும், கந்தசஷ்டி, சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

அமைவிடம்

திருநெல்வேலியில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் கோவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி பஸ் நிலையத்தில் இருந்து கடையம் செல்ல பஸ் வசதி உள்ளது. அங்கிருந்து ஆட்டோவில் கோவிலுக்கு சென்று வரலாம்.

1 More update

Next Story