நெய்வேலி நடராஜர் ஆலயம்


தினத்தந்தி 18 Feb 2025 1:08 PM IST (Updated: 18 Feb 2025 5:04 PM IST)
t-max-icont-min-icon

பக்தர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நடராஜருக்கு கடிதமாக எழுதி, மனுநீதி முறைப்பெட்டியில் போட்டால் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

தேவாரம் ஓதுவதற்கு முன்பு திருச்சிற்றம்பலம் என்று சொல்லி விட்டு தொடங்குவது மரபாகும். இதற்கு காரணம், சிதம்பர புண்ணியஸ்தலம் தான் சைவ திருமுறைகளை பாதுகாத்து, உபசரித்து வந்துள்ளது. அதனால் தான் திருமுறை ஓதுபவர்கள் ஆரம்பத்திலும், முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்கிறார்கள்.

சிறப்புமிக்க திருச்சிற்றம்பலம் என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. இதற்கு எடுத்துக்காட்டாக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பிரசித்தி பெற்ற அழகிய திருச்சிற்றம்பலமுடையான் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் மூலவராக நடராஜபெருமான் காட்சியளிக்கிறார். உலகின் மிக உயரமான ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை இங்கு தான் உள்ளது. இந்த சிலையின் உயரம் 10 அடி 1 அங்குலம், அகலம் 8 அடி 4 அங்குலம். இதன் எடை 2 ஆயிரத்து 420 கிலோ ஆகும். நடராஜர் அருகே வீற்றிருக்கும் சிவகாமி அம்பிகை 7 அடி உயரத்தில் அழகுற பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்பிகையின் சிலையானது, சுமார் 750 கிலோ எடை கொண்டது.

என்.எல்.சி. நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், எழில்மிகு இயற்கை அழகோடு காட்சியளிக்கிறது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என்று கூறப்படுகிறது. நடராஜர் என்றால் சிதம்பரம் கோவில் தான் அனைவரின் நினைவிற்கும் வரும். அந்த மாவட்டத்திலேயே மற்றொரு சிறப்பாக மிகப்பெரிய ஐம்பொன்னால் ஆன சிலையுடையதாக இக்கோவில் அமைந்துள்ளது.

சிறப்பம்சங்கள்

வழக்கமாக எல்லா கோவில்களிலும் உள்ள நடராஜரின் பாதத்தில் மாணிக்கவாசகர் இருப்பார். ஆனால், இந்த கோவில் நடராஜர் பாதத்தில் திருமூலர் இருக்கிறார். மேலும், வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் நடராஜரின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். இது தவிர, சிவாலயங்களில் சிவனின் எதிரே சூரிய பகவான், சந்திரர் ஆகியோருக்கு சன்னிதி அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், இந்த கோவிலில் சூரியனுக்கும், பைரவருக்கும் சன்னிதி அமைந்துள்ளது. பத்து கரங்களுடன் தசபுஜ பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாகும்.

இந்த கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபம் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டு உள்ளது. அதாவது ஒரே கல்லால் நவக்கிரக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நவக்கிரகங்களின் நடுவில் தாமரை பீடத்தில், பெரிய வட்ட வடிவிலான தேரில் சூரிய பகவான் வீற்றிருக்கிறார். இந்த தேரை தேர்ப்பாகன் ஓட்ட, 7 குதிரைகள் இழுத்த நிலையில் உள்ளது. தேரை சுற்றி அஷ்டதிக் பாலகர்கள் உள்ளனர். மற்ற கிரகங்கள் எட்டு திசையை நோக்கி, தவக்கோலத்திலும் உள்ளனர். நடராஜருக்கு 5 சபைகள் இருப்பதை போல, கோவிலில் பளிங்கு சபை அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.

நாயன்மார்களுக்கு தனிக்கோவில்

சிவாலயங்களில் சாமியை தரிசித்துவிட்டு, அதன் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வரும்போது, நாயன்மார்களின் சிலை வரிசையாக இருப்பதை காணமுடியும். ஆனால், இந்த கோவிலில் நாயன்மார்களுக்கு என்று தனிக்கோவில் உள்ளது. அதாவது, இக்கோவில் வளாகத்தில் 9 கலசங்களுடன் திருத்தொண்டர் திருக்கோவில் என்ற பெயரில் நாயன்மார்களுக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு பக்தர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திரத்தில் அதற்குரிய நாயன்மார்களை பூஜை செய்து வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் விநாயகர், சந்திரசேகரர், பார்வதி, மாணிக்கவாசகர், சேக்கிழார் ஆகியோருக்கு தனி சன்னிதி உள்ளது.

தல வரலாறு

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை சிதம்பரம் கோவிலில் சிவபெருமான் எழுதி அதன் முடிவில் திருச்சிற்றபலமுடையான் என்று எழுதினாராம். அதனை அடிப்படையாக கொண்டு இத்தலம் அமைக்கப்பட்டதாக வரலாறு. இதன் காரணமாக இக்கோவிலுக்கு அழகிய திருச்சிற்றம்பலமுடையான் கோவில் என்று பெயர் வந்ததாம். இங்கு நடராஜர் இடது காலை தூக்கி ஆட, அவரது அருகில் சிவகாமி அம்பிகை பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

இக்கோவிலில் மகாசிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும். சித்திரை முதல் தேதி சிவனும், பார்வதியும், 63 நாயன்மார்கள் மற்றும் 12 திருமுறைகளுடன், குறுந்தேரில் எழுந்தருளி வீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர் ஆகியோரது குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவனும், பார்வதியும் கோவில் பிரகாரத்தில் உலாவரும் விழா நிகழ்வு நடைபெறும். இது தவிர பிரதோஷம், ஆனி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம், அமாவாசை, பவுர்ணமி போன்ற காலங்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

கோவில் அமைப்பு

ஆலயத்தின் உள்ளே நுழைந்தவுடன் நந்தி பகவானை தரிசிக்கலாம். தியான மண்டபம் என்னும் பெரிய மண்டபத்தில் ஐம்பொன்னாலான நடராஜர், சிவகாமி அம்பிகை பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். அவர்களை தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்தவுடன் கோவில் சுற்றுச்சுவரில் திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் சைவ சித்தாந்த பயிற்சி மையம் சார்பில் திருமுறை பாடல்கள் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டிருப்பதை காணலாம். இதில் வயிற்று வலி, தலைவலி, செல்வம் பெருக, வாழ்க்கையில் சங்கடம் தீரும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு, எந்த பாடல்களை பாடி இறைவனை வழிபட வேண்டும் என்ற குறிப்பும் உள்ளது.

கோவிலில் அண்ணாமலையார், அறம் வளர்த்தநாயகி சன்னிதியும், அதனை தொடர்ந்து, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகம், தனி சனீஸ்வரர், சூரியன், சந்திரன் உள்ளிட்ட சாமிகளுக்கு தனித்தனி சன்னிதிகள் உண்டு.

திருவிழாக்கள்

கோவிலில் தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. வருடத்தில் 6 முறை நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடைபெறும். இதில் மார்கழி திருவாதிரை, ஆனி திருமஞ்சனம் ஆகிய நாட்களில் காலையில் மகா அபிஷேகம் நடக்கும். சித்திரை, ஆவணி, மாசி, புரட்டாசி ஆகிய மாதங்களில் மகா அபிஷேகம் மாலையில் நடைபெறும்.

ஆராய்ச்சி மணி

மக்கள் தம் குறைகளை மன்னரிடம் எளிதாக எடுத்துரைக்கும் பொருட்டு, அரண்மனையில் கட்டப்படும் மணியே ஆராய்ச்சி மணியாகும். மன்னரிடம் தம் குறைகளை கூற வரும் மக்கள், மன்னரின் கீழுள்ள எவரிடமும் அனுமதி பெறாமல் மன்னரை நேரடியாக சந்திக்க முடியாது. ஆனால், இந்த ஆராய்ச்சி மணி ஒலி கேட்டவுடன் மன்னர், மக்கள் வந்திருப்பது அறிந்து அவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிவார்.

இதே போல் திருசிற்றம்பலமுடையான் கோவில் நுழைவு வாயிலின் கிழக்கே ஆராய்ச்சி மணியும், மனுநீதி முறைப்பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஒரு தாளில் நடராஜருக்கு கடிதமாக எழுதி, மனுநீதி முறைப்பெட்டியில் போட்டு, பின் 3 முறை மணி அடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம். மேலும், பக்தர்கள் கோரிக்கைகளாக எழுதி மனுநீதி பெட்டியில் போடப்படும் கடிதங்களை கோவில் தீட்சிதர்கள் எடுத்தும், நடராஜர் முன்பு ரகசியமாக படித்துவிட்டு, அதனை எரிப்பது வழக்கம். அவ்வாறு கோரிக்கைகள் நிறைவேறிய பக்தர்கள் மீண்டும் கோவிலுக்கு வந்து நன்றிக் கடிதம் எழுதி பெட்டியில் போட வேண்டும்.


Next Story