ஐப்பசி பௌர்ணமி... கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி

வானத்தில் பௌர்ணமி நிலவு தோன்றியதும் 5 அடுக்கு தீபம் ஏந்தி ஆரத்தி காட்டி ஆராதனை செய்யப்பட்டது.
ஐப்பசி பௌர்ணமி... கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
Published on

ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி கன்னியாகுமரி சமுத்திர ஆரத்தி அறக்கட்டளை சார்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 6.30 மணிக்கு மேளதாளம் முழங்க தேவார பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேதபாடசாலையில் இருந்து மேளதாளத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில் உள்ள பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட பரசுராம விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்.

அதன்பிறகு பரசுராமர் விநாயகர் கோவிலில் பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து சப்த கன்னிகள் பூஜை நடந்தது. அதன் பின்னர் கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. அதையடுத்து சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள். அதன்பிறகு வானத்தில் பௌர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் ஏந்தி கிழக்கு திசையில்பவுர்ணமி நிலவை நோக்கி ஆரத்தி காட்டி ஆராதனை செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சாமிதோப்பு குரு சிவச்சந்திரன் அடிகளார் தலைமை தாங்கினார். திருவனந்தபுரம் ஆனந்தமிர்தம் பவுண்டேஷன் தலைவர் ஆனந்த குரு ஸ்ரீ ராஜன் சாய் சுவாமிகள், ஸ்ரீ புஜண்ட நாகநாத சுவாமிகள், அனுஷ்டானத்தின் மடாதிபதி பிரம்ம ஸ்ரீலஸ்ரீ குருநாதானந்தா சுவாமிகள், ஜீவ சமாதி அனுஷ்டம் ஸ்ரீ நானா சுவாமிகள் ஆகியோர் தீபம் ஏற்றி சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் சமுத்திர தீர்த்த ஆரத்தி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜகோபால், ஜெயராம், அனுசுயா, பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் ஜெகநாதன், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம்பிள்ளை உள்பட திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி சமுத்திர ஆரத்தி அறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com