’லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில்...’ திருப்பதியில் விமரிசையாக நடைபெற்ற கருட சேவை


’லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில்...’ திருப்பதியில் விமரிசையாக நடைபெற்ற கருட சேவை
x

தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் மலையப்ப சாமி வெவ்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட வாகனங்களில் மலையப்ப சாமி வீதி உலா வருவதை கண்டு தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் உற்சவரான மலையப்ப சாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன மண்டபத்தில் இருந்து சாமி புறப்பாடு நிகழாமல், கோவிலில் இருந்து நேரடியாக மோகினி அலங்காரத்தில் மைசூரு மகாராணி அளித்த பல்லக்கில் திருமாட வீதிக்கு சாமி புறப்பட்டு வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். உடன் கிருஷ்ணரும் தனி பல்லக்கில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மோகினி சமேதமாய் கிருஷ்ணரின் வீதி உலாவை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை (தங்ககருட வாகன வீதிஉலா) மாலையில் 6.30 மணியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் உலா வந்து அருள் பாலித்து வருகிறார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘கோவிந்தா.. கோவிந்தா.. முழக்கத்துடன் சாமியை தரிசனம் செய்து வருகின்றனர். கருட சேவையின்போது நடன நிகழ்ச்சிகளுடன், பல்வேறு வகையான இசை வாத்தியங்களும் முழங்கின. இந்த நிகழ்ச்சியானது இன்று இரவு 11.30 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story