ஆரணி ஜாத்திரை திருவிழா... சர்வ அலங்காரத்தில் கங்கையம்மன் திருவீதி உலா

திருவீதி உலா நிகழ்ச்சியில் ஆரணி தமிழ் காலனியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி தமிழ் காலனியில் கங்கை அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 8-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஜாத்திரை திருவிழா துவங்கியது. புதன்கிழமை கரகம் வெளியில் வரும் நிகழ்ச்சியும், வியாழக்கிழமை கங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வெள்ளிக்கிழமை கிராம தேவி எல்லை அம்மனுக்கு வாடை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், சனிக்கிழமை வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாராதனையும் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை கங்கை அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திங்கட்கிழமை காலை கங்கையம்மன் திருக்கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக காணியம்மன் திருக்கோவிலுக்கு வந்தனர். பின்னர், அனைத்து பக்தர்களும் வாடை பொங்கல் வைத்து அம்மனுக்கு நெய்வேத்யம் செய்தனர். செவ்வாய்க்கிழமை கங்கையம்மனுக்கு வாடை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதன்கிழமை (நேற்று) இரவு ஆரணி சம்பங்கி புச்சாலீஸ்வரர் திருக்கோவிலிலிருந்து பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கங்கையம்மன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆரணி தமிழ் காலனியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை மஞ்சள் நீராட்டல் நிகழ்ச்சியும், உறியடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.






