தோஷங்களை நீக்கும் ஐயப்ப தரிசனம்

இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் நாளை மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
தோஷங்களை நீக்கும் ஐயப்ப தரிசனம்
Published on

கார்த்திகை மாதம் பொதுவாக தெய்வ வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்பட்டாலும், கார்த்திகை என்றால் பெரிய அளவில் பேசப்படுவது ஐயப்பன் வழிபாடுதான். மாலை அணிந்து கடும் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வதே பெரும் பாக்கியமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

அனைத்து தோஷங்களுக்கும் ஐயப்பன் தரிசனம் பரிகாரமாகும். குறிப்பாக சனி கிரகத்தின் தெய்வமாக ஐயப்பன் கருதப்படுகிறார். ஆகையால் சனி பகவானால் ஏற்படும் தோஷங்களுக்கு, ஐயப்பனின் அருளே போதுமானது. சனி தோஷம் நீங்க, சாஸ்தாவுக்கு நீராஞ்சன பூஜை செய்வது சிறப்பானது. நெய் அபிஷேகமும் செய்யலாம். சபரிமலையில் உள்ள பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலைமுறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நாளை (17.11.2025) பிறக்கிறது. இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் நாளை   விரதத்தை தொடங்குவார்கள்.

நடப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (ஞாயிறு) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அப்போது சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்பார்கள். நாளை (17.11.2025) முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது.

சாதாரண மனிதன் ஒருவன் அவன் செய்த கர்மவினையில் இருந்து மீள வேண்டுமானால், அவன் முதலில் அலைபாயும் நிலையில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு விரதம், அனுஷ்டானம், ஆச்சாரம், தர்மசிந்தனை, செயல்பாடுகள் வேண்டும். இந்த செயல்பாடுகள் ஐயப்ப வழிபாட்டில் முக்கியமாக பார்க்கப்படுகின்றன.

ஒருவர் சபரிமலைக்கு மாலைபோடும் போது இல்லற துறவை மேற்கொள்வது முக்கியம். உடல், பொருள், ஆவி அனைத்தும் ஐயனுக்கே என்று அர்ப்பணிக்க வேண்டும். மாலை போட்ட பிறகு எல்லா ஐயப்பமார்களும் ஒன்றே. அங்கே ஆத்மா ஒன்றே. வேறுபாடு கிடையாது. விருப்பு வெறுப்பு கிடையாது.

ஐயப்பனுக்காக மாலை எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். மலை அந்ததும் நான், எனது என்ற பற்று இங்கே அறுபடுகிறது. ஐயப்பனுக்கு விரதம் முக்கியம். 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்கு போக முடியாதவர்கள், 14 நாட்கள் விரதம் எடுத்து அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி சுமந்து சென்று வணங்கி வரலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com