அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
ஸ்ரீதேவி, பூதேவி, பிரசன்ன வெங்கடேஸ்வரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்து அருள் பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேரோட்டத்தில் கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், உதவி அதிகாரி தேவராஜுலு, கண்காணிப்பாளர் ஸ்ரீவாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி, பிரசன்ன வெங்கடேஸ்வரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.








