திருப்பதி கோதண்டராமர் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்: 20-ந்தேதி நடக்கிறது


திருப்பதி கோதண்டராமர் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்: 20-ந்தேதி நடக்கிறது
x

தீபாவளி அன்று சஹஸ்ர கலசாபிஷேக சேவை, அனுமந்த வாகன சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 20-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று இரவு 7 மணியளவில் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து அதிகாரிகளும், அர்ச்சகர்களும் கோதண்டராமருக்கு புதிய பட்டு வஸ்திரங்கள், தீபங்கள், பல்வேறு புனித பொருள்களை ஊர்வலமாக கொண்டு வந்து சமர்ப்பிக்கின்றனர்.

தீபாவளி அன்று அமாவாசை வருவதால், அன்று நடக்க இருந்த சஹஸ்ர கலசாபிஷேக சேவை, அனுமந்த வாகனச் சேவை ரத்து செய்யப்படுகின்றன.

தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடக்கிறது. அன்று அதிகாலை சுப்ரபாதத்தில் சாமியை எழுந்தருள செய்து தோமாலை சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் நடக்கிறது.

அதன்பிறகு கோவிலில் தூய்மைப் பணி நடக்கிறது. அப்போது கோவில் மண்டபங்கள், சுவர்கள், மேற்கூரைகள், பூஜை பொருட்கள் போன்றவை தூயநீரால் சுத்தம் செய்யப்படுகிறது. தூய்மைப்பணி முடிந்ததும், நாமக்கொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சகற்பூரம், குங்குமம், கிச்சிலிகிழங்கு போன்ற நறுமணப் பொருட்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. இதையடுத்து காலை 10.30 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story