திருத்தணி முருகன் கோவிலில் 26-ம் தேதி வரை தினமும் 2 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து


திருத்தணி முருகன் கோவிலில்  26-ம் தேதி வரை தினமும் 2 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து
x

கந்த சஷ்டி விழாவின் முதல் நாளில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த 2-வது நாள் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

விழாவை முன்னிட்டு மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை காவடி மண்டபத்தில் உற்சவருக்கு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

கந்த சஷ்டி விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலம் மற்றும் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் நிறைந்திருந்தனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர். அதேபோல் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

28-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. தினமும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. நடைபெறும். கந்த சஷ்டி நிறைவு நாளில் அனைத்து கோவில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் சூரபத்மனை வதம் செய்த முருகன், அங்கிருந்து வந்து திருத்தணி மலையில் சினம் தணித்ததால், திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடைபெறும். ஏராளமான மலர்களால் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வார்கள்.

இன்று (23ம் தேதி) முதல் வரும் 26ம் தேதி வரை காலை 9 மணி முதல் 11 மணி வரை கந்த சஷ்டி சிறப்பு பூஜை நடைபெற இருப்பதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. பகல் 11 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கந்த சஷ்டி விழாவையொட்டி திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் முருகன் கோவிலின் துணை கோவிலான ஸ்ரீகோட்ட ஆறுமுக சாமி கோவிலிலும் நேற்று கந்தசஷ்டி விழா தொடங்கியது.

1 More update

Next Story