தர்மபுரி குமாரசாமிபேட்டை துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம்


தர்மபுரி குமாரசாமிபேட்டை துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம்
x

திருவிழாவில் தொடர்ந்து 7 நாட்கள் தினமும் காலை, மாலை, இரவு என 3 வேளைகளிலும் துர்க்கையம்மனுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ துர்க்கையம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் லட்சார்ச்சனை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு துர்க்கையம்மன் கோவில் 34-வது ஆண்டு லட்சார்ச்சனை விழா கடந்த 5-ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி மாரியம்மன் கோவில் அருகில் இருந்து மேளதாளங்கள் முழங்க பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தவுடன் துர்க்கையம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், வழிபாடுகள் மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து 7 நாட்கள் தினமும் காலை, மாலை, இரவு 3 என மூன்று வேளையும் துர்க்கையம்மனுக்கு லட்சார்ச்சனை, சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. துர்க்கையம்மனுக்கு பூர்த்தி ஹோமம், 108 சங்காபிஷேகம் மற்றும் காசி கங்கை தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான துர்க்கையம்மன் தேரோட்டம் இன்று நடைபெற்றது. காலையில் பெண்கள் மட்டும் வடம் பிடிக்கும் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மின்விளக்கு அலங்காரத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டமும் நடைபெறுகிறது.

விழாவில் நிறைவு நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

1 More update

Next Story