கோவர்த்தன பூஜை: கோவில்களில் விமரிசையாக நடைபெற்ற அன்னக்கூட உற்சவம்


கோவர்த்தன பூஜை: கோவில்களில் விமரிசையாக நடைபெற்ற அன்னக்கூட உற்சவம்
x
தினத்தந்தி 22 Oct 2025 2:43 PM IST (Updated: 22 Oct 2025 5:43 PM IST)
t-max-icont-min-icon

கோவர்த்தன பூஜையில் பல்வேறு வகையான உணவுகள், பால் தயாரிப்புகள், பலகாரங்கள் சிறிய மலையைப் போல அடுக்கி வைக்கப்பட்டு பகவானுக்கு படைக்கப்பட்டது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கி குடையாக பிடித்ததன் நினைவாக, கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது.

பிருந்தாவனவாசிகள் மழை வேண்டி தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு பூஜை செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இந்திர வழிபாட்டைக் கைவிட்டு கோவர்த்தன மலையை வழிபடுமாறு பரிந்துரைத்தார். இதை அறிந்ததும், இந்திரன் கோபமடைந்து, பிருந்தாவனத்தின் மீது பேரழிவை ஏற்படுத்தும் மழையை அனுப்பினார். இந்த பெருமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிருந்தாவன மக்களை பாதுகாப்பதற்காக, பகவான் கிருஷ்ணர் தனது சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தூக்கி குடையாக பிடித்தார். அது பிருந்தாவனவாசிகள் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்தது.

இதனால் இந்திரன் தனது தவறை உணர்ந்து கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார். இவ்வாறு, பரம புருஷரிடம் சரணடைந்து பக்தித் தொண்டில் ஈடுபடும் ஒரு பக்தன், பௌதிக நன்மைக்காக எந்த தேவர்களையும் வணங்கத் தேவையில்லை என்றும் பரம புருஷர் நிரூபித்தார். இந்த சம்பவம் ‘கோவர்த்தன லீலை’ என்று அழைக்கப்படுகிறது, இது ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது காண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணரின் அறிவுறுத்தல்களின்படி, பிருந்தாவனவாசிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தின் சுக்ல பட்சத்தின் பிரதமை திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் தானியம் மற்றும் நெய் சேர்த்து சமைத்த பல்வேறு வகையான உணவுகள், பால் தயாரிப்புகள், பலகாரங்களை தயார் செய்கிறார்கள். இந்த உணவுகள் அனைத்தும் ஒரு சிறிய மலையைப் போல அடுக்கி வைக்கப்பட்டு பகவானுக்கு படைக்கப்படுகிறது. பின்னர் அது அனைவருக்கும் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. எனவே, இந்த விழா அன்னக்கூட விழா என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் கோவர்த்தன பூஜை நாளன்று பக்தர்கள் பசுக்களை வணங்குகிறார்கள். பகவான் கிருஷ்ணர் கோபாலர் என அதாவது பசுக்களின் பாதுகாவலர் என்று அழைக்கப்படுகிறார். கோவர்த்தன பூஜை நாளில் பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு உணவு அளிக்கப்படுகிறது. பசுக்களை முன்னால் வைத்து, பக்தர்கள் கோவர்த்தன மலையைச் சுற்றி வந்து வணங்குகிறார்கள்.

பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இந்த பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதேபோல் இஸ்கான் கோவில்களிலும் கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் இன்று நாடு முழுவதும் கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது. கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்கின்றனர்.

செகந்திராபாத் ரசூல்புராவில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் நடைபெற்ற அன்னக்கூட மகோற்சவத்தில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மங்களகரமான நன்னாளில் மக்கள் அனைவரின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பகவானிடம் பிரார்த்தனை செய்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.

கோவா மாநிலம் குட்னம் கிராமத்தில் உள்ள கோமஞ்சல் பால் பண்ணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல் மந்திரி பிரமோத் சாவந்த் கலந்துகொண்டு, பசுக்களுக்கு உணவு வழங்கி, ஆரத்தி காட்டி வழிபட்டார்.

இதேபோல் இஸ்கான் கோவில்களில் கோவர்த்தன பூஜை விழா விமரிசையாக நடைபெற்றது. அன்னத்தால் கோவர்த்தன மலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், கோவர்த்தன கிரி அன்னக் கூட விழா நடந்தது. பக்தர்கள் அன்னக்கூட கோவர்த்தன மலையை வலம் வந்து வழிபட்டனர்.

1 More update

Next Story