இந்து கோவில்களில் கொடிமரம் வந்தது எப்படி?
இந்து கோவில்களில் த்வஜஸ்தம்பம் அல்லது கொடிமரம் என்பது கோவில் கோபுரத்திற்கும் கருவறைக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பம் ஆகும்.
மகாபாரதப் போர் முடிந்து பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தனர். பாண்டவர்களில் மூத்தவரான தருமர், நிறைய தான - தர்மங்கள் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு, 'இந்த உலகிலேயே தன்னை விட தானமும், தர்மமும் செய்பவர் எவரும் இருக்க முடியாது' என்ற கர்வம் பிறந்தது. அந்த கர்வம் அவருக்கு, 'தானே உலகில் சிறந்த நீதிமான்' என்ற எண்ணத்தையும் வழங்கியது.
இதை உணர்ந்த கிருஷ்ணர், தருமரின் கர்வத்தை அகற்றி, அவருக்கு பாடம் புகட்ட எண்ணினார். உடனே தருமரிடம் சென்று, நீ ஒரு அசுவமேத யாகம் செய். அது நாட்டிற்கு மேலும் பல நன்மைகளை வழங்கும்" என்றார்.
இதையடுத்து தருமர், அசுவமேத யாகத்தை தொடங்கினார். அசுவமேத யாக குதிரை, மற்ற பாண்டவர்களுடன் பாரத தேசத்தை வலம் வரத் தொடங்கியது. பாண்டவர்களின் பராக்கிரமம் அறிந்த பல மன்னர்கள், தருமரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் அசுவமேத யாக குதிரை, மணிப்பூர் ராஜ்ஜியத்தை அடைந்தபோது நிலைமை மாறியது. அந்த ராஜ்ஜியத்து அரசனின் பெயர், மயூரத்வஜன். அவன் சிறந்த கிருஷ்ண பக்தன் ஆவான். அவனுக்கு அசுவமேத யாக குதிரை, கிருஷ்ணர் ஆதரவைப் பெற்ற பாண்டவர்களுடையது என்பது நன்கு தெரியும். ஆனாலும் அவனுக்கு தன்னுடைய ராஜ்ஜியத்தை விட்டுக்கொடுக்க மனம் இல்லை. எனவே குதிரையை தடுத்து நிறுத்தினான். மயூரத்வஜனின் மகன் தாம்ப்ராதவஜன், பாண்டவர்களுடன் போரிட்டு அவர்களை சிறைபிடித்தான்.
இந்த செய்தியை அறிந்த கிருஷ்ணரும், தருமரும் மணிப்பூர் விரைந்தனர். அப்போது கிருஷ்ணர், "உன்னால் மயூரத்வஜனை தோற்கடிக்க முடியாது. எனவே நாம் மாறு வேடத்தில் செல்வோம்" என்று தருமரிடம் கூறினார். பின்னர் இருவரும் அந்தணர் வேடம் பூண்டு மயூரத்வஜனை சந்தித்தனர்.
அந்தணர் வேடத்தில் இருந்த கிருஷ்ணர், "அரசே.. நாங்கள் காட்டு வழியாக இங்கே வரும் வழியில், ராட்சசன் ஒருவன் எனது மகனை பிடித்துக்கொண்டான். அந்த ராட்சசன் என் மகனை சாப்பிடாமல் இருக்க வேண்டுமானால், உடனடியாக மனித மாமிசத்தைக் கொண்டு செல்ல வேண்டும். அந்த ராட்சசனுக்கு சரி பாதி உடல் பாகம்தான் வேண்டுமாம். எனவே உன் உடலில் பாதியை தந்தால், என் மகனை மீட்க முடியும். அதோடு உன் உடலை உன் மனைவியும், மகனும்தான் வெட்ட வேண்டும்" என்றார். மயூரத்வஜனும் அதற்கு சம்மதம் தெரிவித்தான். அப்போது அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதைக் கண்ட தருமன், "கண்ணீருடன் தரப்படும் தானம் எங்களுக்குத் தேவையில்லை" என்றான். அதற்கு மயூரத்வஜன், "மன்னிக்க வேண்டும் வேதியர்களே.. என்னுடைய உடலின் ஒரு பாகம்தானே பயன்படப்போகிறது. மற்றொரு பாகம் யாருக்கும் பயனின்றி போகப் போகிறதே" என்பதை நினைத்துத்தான் என் கண்கள் கலங்கின என்று தெரிவித்தான்.
அதைக் கேட்டதும் தருமரின் ஆணவம் அழிந்தது. தான் இதுவரை செய்து வந்த தானமும்- தர்மமும் இவன் முன்பு ஒன்றும் இல்லை என்று தருமர் நினைத்து வருந்தினார். அப்போது கிருஷ்ணர் தன்னுடைய சுய உருவத்தைக் காட்டி விஸ்வரூபமாக மயூரத்வஜனுக்கு தரிசனம் அளித்தார். மேலும் "கடவுளை வணங்கும் இடங்களில் நீயும், உன் மனைவி, மகனும் த்வஜஸ்தம்பம் (கொடிமரம்) ஆக இருப்பீர்கள். ஆலயத்தில் உள்ள தெய்வத்தை வணங்குவதற்கு முன்பாக அனைவரும் உங்களை வணங்குவார்கள்" என்ற வரத்தை அருளினார்.
கொடி மரமானது, ஜீவதாறு (உயிர் உள்ள மரம்) என்ற மரத்தில் செய்யப்படுகிறது. அது தாமிரம் மற்றும் தங்கத் தகடுகளால் மூடப்பட்டு, ஆகம விதிப்படி சில சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. கொடிமரத்தின் மேலே மூன்று உலோக அடுக்குகள் அமைக்கப்படுகின்றன. அதன் பெயர் 'மேகலா' ஆகும். அந்த மூன்றும் பூமி, அண்டம், சொர்க்கம் ஆகியவற்றை குறிப்பதாகும். அதில் பாலி என்ற சிறிய மணி இருக்கும். கொடி மரத்தின் உச்சியில் மயூரத்வஜனை நினைவுகூரும் வகையில் ஆகாச தீபம் என்ற சிறிய விளக்கும் இருக்கும். கொடி மரத்தில் ஏற்றப்படும் கொடிக்கு 'த்வஜபடம்' என்று பெயர். அந்த கொடியில் நந்தி, கருடன் அல்லது திரிசூலம் போன்றவை பொறிக்கப்பட்டு இருக்கும். கொடிமரத்தை சுற்றாமல், கோவில் பிரதட்சணம் நிறைவு பெறாது.