இரட்டை திருப்பதி தேவர்பிரான் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
கொடியேற்றத்தைத் தொடர்ந்து சுவாமி, தாயார்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
நவதிருப்பதிகளில் 5-வது தலமான இரட்டை திருப்பதி தேவர் பிரான் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் நடந்தது. காலை 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் தேவர் பிரான் அம்பாள்களுடன் முன் மண்டபத்தில் எழுந்தருளினார். கொடி பட்டம் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. கொடிமர பூஜைகள் முடிந்து பிரமோற்சவ விழா கொடியேற்றப்பட்டது. பின்னர் சுவாமி, தாயார்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர், சந்தானம், வாசு, நிர்வாக அதிகாரி சதீஷ், ஆய்வாளர் நம்பி, அறங்காவலர் குழு தலைவர் கணேசன் என்ற ராமானுஜன், உறுப்பினர்கள் ராமலட்சுமி, காளிமுத்து, செந்தில், கிரிதரன், கள்ளபிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 11 நாட்கள் விழா நடைபெறும். விழா நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு சாயரட்சையும் மாலை 5.30 மணிக்கு வாகன சேவையும் நடைபெறும். இந்திர விமானம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், சேஷ வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் தேவர் பிரான் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஐந்தாம் திருவிழாவில் தேவர் பிரான் மற்றும் செந்தாமரை கண்ணன் கருட சேவை நடைபெறுகிறது.








