திருமருகல் முருகன் கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை

சந்திர பிரபை வாகனத்தில் சுப்ரமணிய சுவாமி வீதியுலா
விழா நாட்களில் தினமும் சுப்பிரமணிய சுவாமி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாகை மாவட்டம் திருமருகலில் வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி திருவிழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், திரவியம், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் சாமி வீதி உலாவும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் விழா நாட்களில் தினமும் வெவ்வேறு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக வரும் 27-ம் தேதி மதியம் வேல் வாங்குதல், இரவு பாலசுப்பிரமணியர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹார உற்சவம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வீதி உலா காட்சியும், மறுநாள் முடிகொண்டான் ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறும். 31-ம் தேதி வேல் பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.






