கார்த்திகை பிரம்மோற்சவ விழா 2-ம் நாள்: பெரியசேஷ, ஹம்ச வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதி உலா


கார்த்திகை பிரம்மோற்சவ விழா 2-ம் நாள்: பெரியசேஷ, ஹம்ச வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதி உலா
x

இன்று காலை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா நடைபெற உள்ளது.

திருப்பதி,

திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் நடக்கும் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் அதிகாலை மூலவர் மற்றும் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. அதன்பிறகு திருச்சி உற்சவம் நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.

விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை பெரிய சேஷ வாகனத்தில் பரமபத வைத்தியநாதர் அலங்காரத்தில் பத்மாவதி தாயார் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சாமி வீதி உலாவின் முன்பு குதிரைகள், எருதுகள், யானைகள் முன்னணியில் நகர, மங்கள இசைகள், பக்தர்களின் கோலாட்டம், நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.

நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சிறிய ஜீயர் சுவாமிகள், திருப்பதி தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி வீரபிரம்மன், பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், அர்ச்சகர் பாபு சுவாமி மற்றும் அதிகாரிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (புதன்கிழமை) காலை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, நாளை (வியாழக்கிழமை) காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு அனுமந்த வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு ‘சிகர’ நிகழ்ச்சியாக யானை வாகன வீதிஉலா நடக்கிறது.

22-ந்தேதி காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா, 23-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 24-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 25-ந்தேதி காலை பஞ்சமி தீர்த்தம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி), இரவு கொடியிறக்கம் நடக்கிறது. தொடர்ந்து 26-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது.

1 More update

Next Story