திருச்சானூரில் கார்த்திகை பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்.. தேவஸ்தான அதிகாரி, கலெக்டர் ஆய்வு


திருச்சானூரில் கார்த்திகை பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்.. தேவஸ்தான அதிகாரி, கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Nov 2025 11:00 AM IST (Updated: 13 Nov 2025 11:04 AM IST)
t-max-icont-min-icon

பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கும் வளாகங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க சுமார் 2 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா வருகிற 17 முதல் 25-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி திருப்பதி தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால், திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கடேஸ்வர் ஆகியோர் இணைந்து பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியதாவது:-

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்றார். அதேபோல், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடக்க உள்ள வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

ஆண்டு தோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப அன்னப்பிரசாதம், குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு போன்ற விரிவான ஏற்பாடுகளை தேவஸ்தானம் மேற்கொள்ளும்.

600 போலீசார்

பிரம்மோற்சவ விழாவின்போது ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. 25-ந்தேதி பஞ்சமி தீர்த்த நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்குமிடங்களுக்கு அருகில் காத்திருக்கிறார்கள். அந்தப் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

பிரம்மோற்சவ விழாவையொட்டி பல வண்ண மலர்களால் அலங்காரம், தோரணங்கள் அமைக்கப்படும். மின் விளக்கு அலங்காரம் செய்யப்படும். பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் 24 மணிநேரமும் செயல்படும். பிரம்மோற்சவ விழாவையொட்டி 700 தேவஸ்தான துப்புரவுப் பணியாளர்கள், 600 போலீசார், 900 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.

பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கும் வளாகங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க சுமார் 2 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஆந்திர மாநில அரசின் சார்பாக பத்மாவதி தாயாருக்கு 17-ந்தேதி மாநில அறநிலையத்துறை மந்திரி ஆனம். ராமநாராயண ரெட்டி பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிப்பதாக, தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் தெரிவித்தார்.

25-ந்தேதி பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது. அதையொட்டி திருமலையில் இருந்து திருச்சானூருக்கு பட்டு வஸ்திர ஊர்வலம் நடக்கும்போது, அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கடேஸ்வர் தெரிவித்தார்.

போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு கூறுகையில், முந்தைய அனுபவங்களை கருத்தில் கொண்டு, பஞ்சமி தீர்த்தத்தின் முக்கிய நாளான பிரம்மோற்சவத்தின் கடைசி நாளில் பக்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர் போலீசார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள், எனத் தெரிவித்தார்.

புனித நீராடல்

பஞ்சமி தீர்த்தம் அன்று திருச்சானூரில் உள்ள பத்ம சரோவரம் புஷ்கரணியில் சுமார் 75 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு, எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க அல்லது பக்தர்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா தெரிவித்தார்.

ஆய்வின்போது தேவஸ்தான என்ஜினீயர் சத்யநாராயணா, நிதித்துறை அதிகாரி பாலாஜி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திர நாத், கோவில் அர்ச்சகர்கள் பாபு சுவாமி, மணிகண்ட சுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story