கார்த்திகை கடைசி சோமவாரம்.. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை கடைசி சோமவாரம்.. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
Published on

கார்த்திகை மாத சோமவாரம் (திங்கட்கிழமை) சிவனுக்கு உகந்த நாளாகும். சோமவாரத்தில் சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜை செய்து, அதனை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு வாய்ந்ததாகும்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவிலில் கார்த்திகை மாத முதல் 4 சோமவாரங்களில் 108 சங்காபிஷேகம் நடந்தது. கடைசி சோமவாரமான இன்று 1,008 சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி மதியம் 2 மணியளவில் 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு அலங்கரித்து வைத்து சிவாச்சாரியார்கள் பூஜை நடத்தினர். பின்னர் சிவ மூல மந்திர யாகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மூலவர் வாலீஸ்வரருக்கு 1,008 சங்குகளில் இருந்த புனித நீரை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போல் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவ சுவாமிகளுக்கு சங்குகளில் இருந்த புனித நீரை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி  சங்காபிஷேகம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com