குமாரகோவில் முருகன் கோவிலில் காவடி திருவிழா... அரசு சார்பில் காவடி சுமந்து சென்ற அதிகாரிகள்


குமாரகோவில் முருகன் கோவிலில் காவடி திருவிழா... அரசு சார்பில் காவடி சுமந்து சென்ற அதிகாரிகள்
x

தக்கலை போலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட காவடிகள்

குமாரகோவில் முருகன் கோவிலில் நடைபெற்ற காவடி திருவிழாவில், அரசு சார்பில் போலீசார் மற்றும் அதிகாரிகள் காவடி எடுத்து சென்றனர்.

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரகோவிலில் பிரசித்தி பெற்ற வேளிமலை முருகன் கோவில் உள்ளது. மிக பழமைவாய்ந்த இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்த பக்தர்கள் காவடி எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது.

அதுபோல் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் நாட்டில் மும்மாரி மழை பெய்து விவசாயம் செழித்து மக்கள் பசி, பட்டினி இன்றி வாழ வேண்டி பொதுப்பணித்துறை சார்பிலும், நாட்டில் குற்றங்கள் குறைந்து மக்கள் சண்டை சச்சரவுகள் இன்றி நிம்மதியாக வாழ வேண்டி போலீஸ் துறை சார்பிலும் காவடி எடுத்து செல்வது வழக்கம். இந்த பாரம்பரிய மரபு சார்ந்த நிகழ்ச்சி மன்னர் ஆட்சிக்கு பின்னரும் தற்போது அரசு சார்பில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று காலை தக்கலை போலீஸ் நிலையம் சார்பில் 2 புஷ்ப காவடியும், யானை மீது ஒரு பால்குடமும் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக போலீஸ் நிலையத்தில் வைத்து சாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக கொண்டு செல்லும் பசும்பாலை கலசங்களிலும், குடத்திலும் நிரப்பும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்சியில் பத்மநாபபுரம் கோர்ட் நீதிபதிகள் ராமச்சந்திரன், மாரியப்பன், கோகிலா, நரேந்திர குமார், தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்ட் பார்த்தீபன் ஆகியோர் கலசங்களில் பால் ஊற்றி நிறைத்தனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் பாரதிராஜா, உமா, சப் -இன்ஸ்பெக்டர்கள் இம்மானுவேல், ஜெயச்சந்திரன், ஜான் போஸ்கோ , வக்கீல் வேலுதாஸ், கவுன்சிலர் கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து காவடிகள் போலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டன.

இதேபோல் தக்கலை பொதுப்பணித்துறை நீர் ஆதாரப் பிரிவு அலுவலத்தில் இருந்து மூன்று புஷ்ப காவடிகள் மற்றும் யானை மீது பால்குடம் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டன.

இந்த இரண்டு அரசு அலுவலகத்திலிருந்தும் புறப்பட்ட காவடிகள் தக்கலை பகுதியில் உள்ள அரசு அலுவலங்களுக்கு சென்று திரும்பின. அப்போது அந்தந்த அலுவலகங்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் மற்றும் பொதுப்பணித்துறை காவடிகள் ஊர்வலமாக தக்கலை நகரை வலம் வந்த பின் குமாரகோவிலுக்கு சென்றன.

இது போல் தக்கலை, ராமன்பறம்பு, புலியூர் குறிச்சி, தென்கரை, தோப்பு, பிரம்மபுரம், கொல்லன் விளை, வெட்டிக் கோணம், முத்தலக்குறிச்சி, இரணியல் கோணம், பூக்கடை, புங்கறை, குமாரபுரம், வழிக்கலம்பாடு, முட்டைக் காடு, பத்மநாபபுரம், குலசேகரம், பூக்கடை, கேரளபுரம் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பறக்கும் காவடி, பறக்கும் குதிரை காவடி, மயில் காவடி புஷ்ப காவடி, வேல் காவடி, சூரிய காவடி, தொட்டில் காவடி என விதவிதமான காவடிகள் எடுத்து கோவிலுக்கு அணிவகுத்து சென்றனர்.

காவடி எடுத்து செல்லும் பக்தர்களோடு அவர்களது உறவினர்களும் அணிவகுத்து புலியூர் குறிச்சி வழியாக குமாரகோவில் சந்திப்பிற்கு வந்து அங்கிருந்து அனைத்து காவடிகளும் கோவிலுக்கு சென்றன. அரசு சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் நூறுக்கும் மேற்பட்ட காவடிகள் பக்தர்கள் புடைசூழ பவனியாக சென்றதால் இன்று காலை முதல் மதியம் வரை தக்கலை - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்தபடி சென்றன.

இந்த காவடி விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், தீபாராதனை, ஸ்ரீபலி பூஜை ஆகியவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு வந்த காவடிகளில் முதலில் அரசு சார்பில் தக்கலை போலீஸ் நிலையம் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபிஷேக பொருளை கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் காவடிகளில் கொண்டு வந்த பால், பன்னீர், இளநீர், தேன், மஞ்சள்,குங்குமம், சந்தணம், பஸ்மம் போன்றவற்ற கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனை, ஸ்ரீபலி பூஜைக்கு ஆகியவற்றிற்கு பின் கோவில் நடை அடைக்கப்பட்டது.

காவடி விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தக்கலை போலீஸ் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினர். மீண்டும் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள், தீபாராதனை, ஸ்ரீபலி பூஜை நடைபெறும்.

1 More update

Next Story