புலியாக வந்து பக்தர்களுக்கு முக்தி கொடுத்த சிவபெருமான்

திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர் கோவில் சிவன் கோவிலாக இருந்தாலும் இங்குள்ள அபிராமி அம்பிகையே பிரதானமாக போற்றப்படுகிறார்.
திண்டுக்கல் நகரில் பிரசித்தி பெற்ற காளஹஸ்தீஸ்வரர் கோவில் (அபிராமி அம்மன் கோவில்) உள்ளது. இத்தலத்தில், இரண்டு மூலவர் சன்னிதிகள் உள்ளன. காளஹஸ்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை, பத்மகிரீஸ்வரர் உடனுறை அபிராமி அம்பிகை என இரண்டு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இது சிவன் கோவிலாக இருந்தாலும் இங்குள்ள அபிராமி அம்பிகையே பிரதானமாக போற்றப்படுகிறார்.
முற்காலத்தில் இங்கு திருக்கார்த்திகை விழா மிகவும் விசேஷமாக நடந்துள்ளது. பாஹு, சுபாஹு என்ற இரு சிவபக்தர்கள், கார்த்திகையன்று தவறாது சிவனை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருசமயம் அவர்கள் இங்கு வந்தபோது, அவர்களை சோதிக்க எண்ணிய சிவபெருமான், புலியின் வடிவில் சென்று, அவர்களைக் கொல்லப்போவது போல் நடித்தார். அவர்கள், சிவ தரிசனத்திற்கு பிறகு தங்களை உண்ணும்படி புலியிடம் கேட்டுக் கொண்டனர். புலியும் சம்மதிக்கவே, சிவனை வணங்கிவிட்டு புலியிடம் சென்றனர்.
வார்த்தை தவறாத அவர்களுக்கு சிவபெருமான் தனது சுயரூபத்தை காட்டி, முக்தி கொடுத்தருளினார். இந்த நிகழ்வை பக்தர்களுக்கு விளக்கும் வகையில், கார்த்திகையன்று, சிவன் புலியாக வந்த வைபவத்தை இங்கு பாவனையாகச் செய்து காட்டுவார்கள்.






