திருப்பதி, திருமலையில் படித்திருவிழா: 30-ந்தேதி தொடங்குகிறது

பாத யாத்திரை குழு அலிபிரி பாத மண்டபத்தை அடைந்ததும் அங்கு படிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருமலையை நோக்கி பாத யாத்திரை தொடங்குகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் தாச சாகித்ய திட்டம் சார்பில் 30-ந்தேதியில் இருந்து நவம்பர் 1-ந்தேதி வரை 3 நாட்கள் படித்திருவிழா (மெட்லோற்சவம்) நடக்கிறது. 30, 31-ந்தேதிகளில் மதியம் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை திருப்பதியில் பஜனை மண்டலிகள் சார்பில் நாம சங்கீர்த்தனம், கூட்டுப் பஜனை மற்றும் மகான்களின் உபதேசங்கள் நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இசை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நவம்பர் 1-ந்தேதி காலை 8.30 மணிக்கு கூட்டு நாம சங்கீர்த்தனம், காலை 9.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.
முன்னதாக 31-ந்தேதி அதிகாலை பாத யாத்திரை புறப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு அலிபிரி பாத மண்டபத்தை அடைந்ததும் அங்கு படிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருமலையை நோக்கி பாத யாத்திரை தொடங்குகிறது.
பண்டைய காலத்தில் பல்வேறு முனிவர்கள், ராஜரிஷிகள், புரந்தரதாசர், வியாசராய யதீஸ்வரர், அன்னமாச்சாரியார், கிருஷ்ண தேவராயர், ராமானுஜர் போன்ற மகான்கள் பக்தி பரவசத்துடன் திருமலைக்கு பாத யாத்திரையாக வந்து ஏழுமலையானின் அருளை பெற்றனர். அவர்களை போல் பக்தர்களாகிய நாமும் ஏழுமலையானின் அருளை பெற அனைவரும் தகுதி உடையவர்களாக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் படித்திருவிழா நடத்தப்படுவதாக, தாச சாகித்ய திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






