விலங்குகளை பெருமைப்படுத்தும் நேபாள தீபாவளி


விலங்குகளை பெருமைப்படுத்தும் நேபாள தீபாவளி
x

நேபாளத்தில் தீப ஒளித் திருவிழாவின் மூன்றாம் நாள் ‘கை திஹார்’ என்ற பெயரில் பசு மற்றும் லட்சுமிக்கு பூஜை செய்கிறார்கள்.

இந்தியாவில் இன்று தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நன்னாளில் நேபாள நாட்டில் ஐந்து நாள் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்று தொடங்கிய இந்த திருவிழா 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. அது என்ன 5 நாள் திருவிழா?

திஹார் எனப்படுவது நேபாள நாட்டில் ஐந்து நாட்கள் நடைபெறும் ஒரு தீப ஒளித் திருவிழாவாகும். இந்த விழா அந்நாட்டில் தீபாவளிக்கு வழங்கும் வேறு பெயராகும். இந்த பண்டிகை மரணக் கடவுளான எமனையும், அதே நேரத்தில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி வழிபாடு ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. மேலும் மனித வாழ்வில் ஒருங்கிணைந்த விலங்குகளுக்கு நன்றியைத் தெரிவிக்கவும், குடும்ப உறவுகள் மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறவும் இந்த விழா நடத்தப்படுகிறது. ஒற்றுமை, செழிப்பு, மனிதர்கள், விலங்குகள் மற்றும் கடவுள்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை இந்த விழா எடுத்துக்காட்டுகிறது.

முதல் நாளை ‘காக் திஹார்’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இதற்கு எமனின் தூதர்களாகக் கருதப்படும் காகங்கள் இந்நாளில் கவுரவிக்கப்படுகின்றன. அனைவரும் தானியங்கள், இனிப்புகள் மற்றும் அரிசி போன்ற பிரசாதங்களை காகங்களுக்காக படையலாக வீட்டின் கூரை அல்லது திறந்தவெளிகளில் வைக்கின்றனர். காகங்களை சாந்தப்படுத்துவதன் மூலம் கெட்ட செய்திகள், கெடுதல்கள் ஏதும் நடக்காது என்று நம்பப்படுகிறது.

இரண்டாவது நாள் ‘குக்குர் திஹார்’ என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாய்களை கவுரவப்படுத்துகிறார்கள். அவற்றின் விசுவாசம், அன்பு, தோழமைக்காக பெரிதும் மதிக்கப்படுகின்றன. இந்நாளில், நாய்களின் நெற்றியில் சிவப்பு குங்குமம் வைத்து, சாமந்தி மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுகின்றன. அவற்றிற்கு சுவையான உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இது மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் பிரிக்க முடியாத பிணைப்பை குறிக்கிறது. இந்த கொண்டாட்டம் வீட்டு செல்லப்பிராணிகள் என்பதை தாண்டி தெருநாய்கள் போன்றவற்றையும் கவுரவப்படுத்துகிறது.

மூன்றாம் நாள் ‘கை திஹார்’ என்ற பெயரில் பசு மற்றும் லட்சுமிக்கு பூஜை செய்கிறார்கள். இந்த நாளின் காலையில் இந்து மதத்தில் புனிதமாகக் கருதப்படும் பசுக்களுக்கு குங்குமம் இட்டு, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு நன்றியுணர்வின் அடையாளமாக உணவு வழங்கப்படுகின்றன. மாலையில் வீடுகளில் உள்ளவர்கள் லட்சுமிக்கு பூஜை செய்து, எண்ணெய் விளக்குகள் ஏற்றி, வண்ணமயமான ரங்கோலி வடிவ கோலங்களால் வீடுகளை அலங்கரித்து செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை வரவேற்கிறார்கள்.

நான்காவது நாள் ‘கோரு திஹார்’ என்ற பெயரில், விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் எருதுகள் கவுரவிக்கப்படுகின்றன. அன்றைய நாளில் எருதுகள் மாலைகள் மற்றும் இதரப்பொருட்களால் அலங்கரிக்கப்படுகின்றன. அவற்றின் கடின உழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிறப்பு உணவுகள் வழங்கப்படுகின்றன.

ஐந்தாவது நாள் ‘பாய் டிகா’ என்று அழைக்கப்படுகிறது. இது சகோதர-சகோதரிகள் தினம். சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நெற்றியில் ஏழு வண்ண பொட்டு வைத்து ஆசீர்வதிப்பார்கள். சகோதரர்கள், பதிலுக்கு தங்கள் சகோதரிகளுக்கு ஏழு வண்ண பொட்டு இட்டு, சாமந்தி மற்றும் மகாமாலி மாலைகள் அணிவித்து, பரிசுகளையும் பரிமாறிக்கொள்கிறார்கள். இது அன்பையும், குடும்ப உறவின் உன்னதத்தையும் குறிக்கிறது. அன்பு மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து விருந்து உண்டு பண்டிகையை முடிக்கின்றனர்.

1 More update

Next Story