சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவக்கிரக கோவில் பிரதிஷ்டை


தினத்தந்தி 13 July 2025 1:45 PM IST (Updated: 13 July 2025 5:22 PM IST)
t-max-icont-min-icon

நவக்கிரக பிரதிஷ்டையை தொடர்ந்து, இன்று இரவு 10 மணிக்கு வழக்கமான பூஜைகளுக்கு பின் நடை அடைக்கப்படும்.

சபரிமலை அய்யப்பன் கோவிலின் இடது புறம் உள்ள நவகிரக மண்டபத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. தேவபிரசன்னத்தில் கூறப்பட்டதன் அடிப்படையில் மாளிகப்புரத்தம்மன் கோவில் அருகில் புதிய நவக்கிரக கோவில் கட்டப்பட்டு, பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நவக்கிரக கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜை செய்தார்.

நேற்று (சனிக்கிழமை) சுத்தி கலச பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இன்று காலை 11 மணியளவில் வேதமந்திரங்கள் முழங்க நவக்கிரக மண்டபம் பிரதிஷ்டை நடைபெற்றது. பிரதிஷ்டை சடங்குகள் மற்றும் பூஜைகளை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னின்று நடத்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு வழக்கமான பூஜைகளுக்கு பின் நடை அடைக்கப்படும்.

ஆடி மாத பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள் ஆடி மாத சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இந்நாட்களில் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவதாக, திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story