பரமத்தி வேலூர்: பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மிளகாய் யாகம்

மிளகாய் யாகத்தை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தேரடி வீதியில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பெத்தாண்டவர் ஆலயத்தில் பிரத்தியங்கிரா தேவி சன்னதி உள்ளது. இங்கு கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு வர மிளகாய் யாகம் நடைபெற்றது. இதையொட்டி பிரத்தியங்கிரா தேவிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்துடன் பிரத்தியங்கிரா தேவிக்கு உதிரிப் பூக்களினால் அர்ச்சனைகள் செய்து பஞ்சாரத்தியுடன் ஏகாரத்தி காண்பிக்கப்பட்டது.
சிறப்பு வழிபாடுகளில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.






