திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில், காளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி முதல் நாளில் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பின்னர் பவித்ர பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர், சின்ன ஜீயர், திருமலை திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சாந்தி, கூடுதல் அதிகாரி நாராயண சவுத்ரி, கண்காணிப்பாளர்கள், கோவில் ஆய்வாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை வரை பவித்ரோற்சவம் நடைபெறுகிறது.
காளகஸ்தி
இதேபோல் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 5 நாட்கள் நடக்கும் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரையிலும் அந்தாராலய தரிசனம் (மூலவர் சன்னதியில்) ரத்து செய்யப்பட்டது. மேலும் வழக்கமாக கோவிலில் தினமும் அதிகாலை நடக்கும் கோ-பூஜை, சுப்ரபாத சேவையை தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், கோவிலில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜை வழக்கம் போல் நடப்பதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பவித்ரோத்சவத்தின் ஒரு பகுதியாக கோவிலில் உள்ள குருதட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு, வேதப் பண்டிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து பரத்வாஜ் மகரிஷி, ‘ஸ்ரீ’ என்ற ‘சிலந்தி’, ‘காள’ என்ற ‘பாம்பு’, ‘ஹஸ்தி’ என்ற ‘யானை’ ஆகிய 4 உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ மூர்த்திகள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இருந்து மேள தாளம் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் தரிசனம் செய்தனர்.






