ராஜராஜ சோழன் சதய விழா.. தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம்


ராஜராஜ சோழன் சதய விழா.. தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம்
x

பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 39 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாள் மற்றும் முடி சூட்டிய நாள், ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் 1,039-வது சதய விழா இரண்டு நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கருத்தரங்கம், பரதநாட்டியம், கவியரங்கம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இரண்டாம் நாளான நேற்று காலை தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறை நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, யானை மீது வைத்து ராஜவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 39 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பெருவுடையார்- பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், 148 ஓதுவார்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக குஜராத்தில் இருந்து மீட்டு கொண்டுவரப்பட்ட ராஜராஜசோழன்- லோகமாதேவி சிலைகள் முன்பு புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் செய்தனர். அப்போது ராஜராஜசோழன், லோகமாதேவி சிலைக்கு ராஜா, ராணி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு ராஜராஜசோழன் மற்றும் லோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. மேலும் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

1 More update

Next Story