திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் ரூ.106 கோடி உண்டியல் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் ரூ.106 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
திருப்பதி,
திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படுமடா என்ற பாடல் வரி பிரபலம். அந்த வகையில் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் அழைக்கப்படுகிறார். இதனால் தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
இவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணத்தை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். மேலும், இ-உண்டியல் மூலம் ஆன்லைனிலும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் உண்டியலில் பக்தர்கள் ரூ.106.17 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி மாதத்தில் 20.05 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு பிறகு உண்டியல் மூலம் 35-வது மாதமாக காணிக்கை ரூ.100 கோடியை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.