சபரிமலை சீசன்.. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு ஒரு மணி நேரம் நீட்டிப்பு

சபரிமலை சீசன் காலத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் வருவார்கள்.
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும்.
மேலும் டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியில் சீசன் களை கட்டும். கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வரும் மாதம் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும். ஆண்டு தோறும் சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கும் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதனால் சபரிமலை சீசன் காலத்தில் வழக்கத்தை விட கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். இதனை கருத்தில் கொண்டு கோவில் நடை அடைக்கப்படும் நேரம் நீட்டிக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டு வருகிற 17-ந் தேதி முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை அடைக்கும் நேரம் நீட்டிக்கப்படுகிறது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக வழக்கமாக பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை, மதியம் ஒரு மணிக்கும், இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கும் அடைக்கப்படும். சபரிமலை சீசன் முழுவதும் தினமும் கூடுதலாக ஒரு மணி நேரம் கோவில் நடை திறந்திருக்கும் என்று குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






