சீனிவாசமங்காபுரம் கோவிலில் சாக்ஷாத்கார வைபவ உற்சவம்: 30-ம் தேதி ஆரம்பம்

சாக்ஷாத்கார வைபவ உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெறும்.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் சாக்ஷாத்கார வைபவ உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சாக்ஷாத்கார வைபவ உற்சவம் வருகிற 30-ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 2-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. பகவான் தனது பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக எழுந்தருள்வதை கொண்டாடும் வகையில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.
இந்த வைபவத்தை முன்னிட்டு நாளை (26.6.2025) கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. சாக்ஷாத்கார வைபவம் நடைபெறும் 3 நாட்களும் காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெறும். மலையில் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
இதேபோல் தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை வாகன சேவை நடைபெறும். முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்திலும், இரண்டாம் நாளில் அனுமந்த வாகனத்திலும், மூன்றாம் நாளில் கருட வாகனத்திலும் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதி வலம் வந்து அருள்பாலிக்கிறார்.
3 நாள் சாக்ஷாத்கார வைபவ உற்சவம் முடிந்ததும், ஜூலை 3-ம் தேதி ஸ்ரீவாரிமெட்டு அருகே அமைந்துள்ள பார்வேடு மண்டபத்தில் பார்வேடு உற்சவம் நடக்கிறது. சாக்ஷாத்கார வைபவ உற்சவத்தையொட்டி கோவிலில் நாளை நடைபெறவிருந்த கல்யாண உற்சவம், ஜூன் 30 முதல் ஜூலை 2ம் தேதி வரையிலான கல்யாண உற்சவத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. நாளை முதல் ஜூலை 3-ம் தேதி வரையிலான திருப்பாவாடை சேவை, ஜூலை 2-ம் தேதி நடைபெறும் அஷ்டோத்திர கலசாபிஷேகம், ஜூலை 1-ம் தேதி நடைபெறவிருந்த புஷ்பார்ச்சனை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.






