சங்கடஹர சதுர்த்தி: தர்மபுரி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சாலை விநாயகர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
தர்மபுரி சாலை விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையைத் தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது.
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். இதையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
சாலை விநாயகர் கோவில்
தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற சாலை விநாயகர் கோவிலில் இன்று அதிகாலை முதல் சாமிக்கு பால், பன்னீர், சந்தனம் வாசனை திரவியங்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு முத்தங்கி அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
சிவசக்தி விநாயகர்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் தர்மபுரி ஆத்துமேடு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல் தர்மபுரி கடைவீதி தேர் நிலையம் அருகில் உள்ள ஏழூர் பிள்ளையார் கோவில், அப்பாவு நகர் கற்பக விநாயகர் கோவில், குமாரசாமிப்பேட்டை ஸ்ரீ செல்வ கணபதி கோவில், அன்னசாகரம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதி மற்றும் தர்மபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.






