இந்த மாதம் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி, கோதண்டராமர், அப்பலாயகுண்டா கோவில்களில் நடக்கும் விழாக்கள்


இந்த மாதம் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி, கோதண்டராமர், அப்பலாயகுண்டா கோவில்களில் நடக்கும் விழாக்கள்
x
தினத்தந்தி 1 Sept 2025 1:45 PM IST (Updated: 1 Sept 2025 3:22 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருகிற 3-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெறுகிறது.

இந்த மாதம் (செப்டம்பர்) திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில், கோதண்டராமர் கோவில் மற்றும் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்பு விழாக்கள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவத்தையொட்டி செப்டம்பர் 2-ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. 3-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெறுகிறது. 7-ந்தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 3.30 மணிக்கு கோவில் நடை சாற்றப்படுகிறது.

செப்டம்பர் 12, 19 மற்றும் 29-ம் தேதி வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணியளவில் ஆண்டாள் வீதி உலா. செப்டம்பர் 14-ம் தேதி ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு ருக்மிணி, சத்யபாமாவுடன் பார்த்தசாரதி சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

செப்டம்பர் 22-ம் தேதி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு கோவிந்தராஜ சுவாமி, தாயார்களுடன் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குகிறார்.

அப்பலாயகுண்டா கோவில்

அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, 5-ந்தேதி சிரவண நட்சத்திரத்தையொட்டி காலை 10.30 மணிக்கு கல்யாணோற்சவம், 5, 12, 26-ந்தேதி வெள்ளிக்கிழமைகளில் காலை 7 மணிக்கு மூலவருக்கு வஸ்திர அலங்காரச் சேவை மற்றும் அபிஷேகம், 10-ந்தேதி காலை 8 மணிக்கு அஷ்டோத்தர சத கலசாபிஷேகம், 7, 14, 21, 28-ந்தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.15 மணிக்கு பிரசன்ன ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடக்கிறது.

கோதண்டராமர் கோவில்

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் 6, 13, 20, 27-ந்தேதி சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு சீதா, ராமர், லட்சுமணருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது, 7-ந்தேதி பவுர்ணமியையொட்டி அன்று காலை 9.30 மணிக்கு அஷ்டோத்தர சத கலசாபிஷேகம், 7-ந்தேதி சந்திர கிரகணத்தையொட்டி மாலை 3 மணிக்கு கோவில் நடை சாற்றப்படுகிறது. 17-ந்தேதி புனர்வசு நட்சத்திரத்தையொட்டி காலை 11 மணிக்கு சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம், மாலை 5.30 மணிக்கு உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து ராமச்சந்திர புஷ்கரணி வரை மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலம். மாலை 6.30 மணிக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது. 21-ந்தேதி அமாவாசையையொட்டி காலை 9 மணிக்கு சஹஸ்ர கலசாபிஷேகம், மாலை 7 மணிக்கு அனுமந்த வாகன சேவை நடக்கிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story