உலக நலன் வேண்டி சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு யாக வழிபாடு

காமாட்சிபுரி 2ஆம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
உலக நலன் வேண்டி சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு யாக வழிபாடு
Published on

பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் ஆலயத்தில், உலக நலன் வேண்டி சனீஸ்வர பகவானுக்கு மகா சாந்தி அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அத்துடன், சிறப்பு யாக வழிபாடும் நடைபெற்றது.

காமாட்சிபுரி 2ஆம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சனீஸ்வர பகவானை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காமாட்சிபுரி 2 ஆம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பேசும்போது, சனியை போல கொடுப்பாரும் இல்லை; சனியை போல கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி. இதிலிருந்து சனீஸ்வர பகவான் கொடுப்பதில் வள்ளல் என்று தெரிகிறது. சனீஸ்வர பகவான், ஒரு மனிதனின் ஆயுளை ஆதிக்கம் செய்பவர் ஆதலால், இவர் ஆயுள்காரகன் என்றும் போற்றப்படுகிறார். ஆம்! நீண்ட ஆயுள் அல்லது அகால மரணம் இரண்டுக்குமே காரணன் சனீஸ்வர பகவான்தான். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய நான்குக்கும் இவரே காரணன்.

ஒருவரின் ஜாதகத்தில் சனி ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால், அவர் எல்லாவித சௌக்கியங்களையும் பெற்று, உயரிய வாழ்க்கை வாழ்வார். நவக்கிரக சன்னிதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஒன்பது முறை வலம் வந்து வணங்குவதன் மூலம் சனீஸ்வர பகவானின் அருளைப் பெறலாம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com