தைப்பூச திருவிழா: பழனி முருகன் கோவிலில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்

தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பழனி,
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றது. விழாவின் சிறப்பு அம்சமே பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வது தான். அதன்படி, இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 10-ந் தேதியும், தேரோட்டம் 11-ந்தேதியும் நடைபெற்றது. இதையொட்டி சாமி தரிசனம் செய்ய பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமித்தனர். பக்தர்களின் வசதிக்காக கடந்த 10-ந்தேதி முதல் 3 நாட்கள் பழனி முருகன் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அனைத்து பக்தர்களும் இலவசமாக தரிசனம் செய்தனர்.
தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் முடிந்தாலும் பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் பழனியில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






