திருமலையில் அனந்தாழ்வார் அவதார உற்சவம்


தினத்தந்தி 23 Feb 2025 5:04 PM IST (Updated: 23 Feb 2025 5:05 PM IST)
t-max-icont-min-icon

அனந்தாழ்வார் அவதார உற்சவ விழாவில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் மற்றும் அனந்தாழ்வாரின் வம்சாவளியினர் கலந்துகொண்டனர்.

திருமலை,

வைணவ துறவியான அனந்தாழ்வாரின் 971-வது அவதார உற்சவம் இன்று (23.2.2025) திருமலையில் கொண்டாடப்பட்டது. அதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஆழ்வார் திவ்யப் பிரபந்த திட்டத்தின் கீழ் அனந்தாழ்வார் தோட்டத்தில் (புரசைவாரி தோட்டம்) அனந்தாழ்வாரின் அவதார உற்சவ விழா நடைபெற்றது.

நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அனந்தாழ்வாரின் வம்சாவளியினர், சிறப்பு பூஜைகள் செய்து நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை பாடினர். திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். பல்வேறு வைணவ திவ்யதேசங்களிலிருந்து வந்திருந்த புகழ்பெற்ற அறிஞர்கள், சிறப்பு சொற்பொழிவாற்றினர்.

திருமலை சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான தாச சாகித்ய திட்ட சிறப்பு அதிகாரி டாக்டர் ஆனந்த தீர்த்தாச்சார்யுலு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

புனித நூல்களின்படி அனந்தாழ்வார் ஆதிசேஷனின் அவதாரம் என்றும், திருமலையில் ஏழுமலையானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்த முன்னோடி என்றும் அழைக்கப்படுகிறார்.


Next Story