மகத்துவம் மிகுந்த மார்கழி மாதம்


தினத்தந்தி 15 Dec 2025 3:40 PM IST (Updated: 15 Dec 2025 4:40 PM IST)
t-max-icont-min-icon

சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம் மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது.

தமிழ் மாதங்களில் மகத்துவமானது தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி மாதம் தான். மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம் இது. இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறை வழிபாடு செய்வதென்பது தொன்று தொட்டு வரும் பழக்கம்.

தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரையில் இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும் இரவை தட்சிணாயனம் என்றும் அழைப்பார்கள். இவ்வாறு நோக்கும்போது மார்கழி மாதம், தேவலோகத்தின் விடியற்காலையாகும். அதற்காகவே மார்கழி மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்த வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

குறிப்பாக சூரிய உதயத்துக்கு முன்னதாக பிரம்ம முகூர்த்த காலத்தில் வழிபாடு நடத்தப்படுகிறது. அனைத்து கோவில்களிலும், திருவெம்பாவை, திருப்பாவை பாசுரங்களை பாராயணம் செய்து கூட்டு பஜனையுடன் வழிபாடு நடக்கிறது.

இந்த ஆண்டு மார்கழி மாதம் நாளை பிறக்க உள்ள நிலையில், கொண்ட்டாங்களுக்கு பக்தர்கள் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள கோவில்களிலும் வழிபாடு நாளை தொடங்குகிறது. நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் உள்ள கோவில்களில் சிறுவர், சிறுமியர் முதல் முதியோர் வரை அனைவரும் இந்த வழிபாட்டில் பங்கேற்பார்கள். அதிகாலையில் ஒலிபெருக்கி மூலம் பக்திப்பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தி பிரசாதங்கள் வழங்கப்படும். மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம் மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது ஆடலரசனான நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திரகோசமங்கை கோவிலிலும், நடுச்சிதம்பரம் என போற்றப்படும் சேவூர் வாலீஸ்வரர் கோவிலிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவின்போது திருவாதிரைக்களி சிவபெருமானுக்குப் படைக்கப்படுகிறது. திருவாதிரைக்கு ஒருவாய் களி என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும். அன்றைய தினம் விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் சிவனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

மார்கழி மாத முதல் நாளிலிருந்து 30 நாட்களும் பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டுவாசல் தெளித்து கோலமிட்டு அந்த கோலத்தின் மீது அழகாய் சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் பரங்கிப்பூக்களை வைத்து அழகுபடுத்துவார்கள். இந்த கோலத்தை பார்த்தால் அன்னை மகாலட்சுமியே அந்த வீட்டிற்குள் போய் குடியேறுவாள் என்பது ஐதீகம்.

இந்த மார்கழி மாதத்தில் பூசணி பூவானது அதிகமாகப் பூக்கும் என்பதால் இந்தப் பூவினையும் நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.

தமிழர்களின் திருவிழாவான பொங்கல் திருநாளுக்கு முன் மார்கழி மாதத்தில் வரும் 30 நாட்களும் வாசலில் பெரிய கோலமிடுவது வழக்கம். மார்கழி மாதம் முழுவதும் தினசரி கோலத்தின் நடுவே சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து மலர்களால் கோலத்தை அலங்கரிப்பார்கள். கோலத்தின் மீது தீபங்கள் வைத்தும் மார்கழி மாதத்தை வரவேற்பார்கள்.

1 More update

Next Story