கரூர் கம்பம் திருவிழாவின் மகத்துவம்


கரூர் கம்பம் திருவிழாவின் மகத்துவம்
x

கம்பம் மாரியம்மன் ஆலயத்தில் இருக்கும் நாட்களில், தினமும் பக்தர்கள் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

கரூர்

கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறும். அப்போது கம்பம் நடுதலும், பின்னர் அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் விமரிசையாக நடக்கும் பாரம்பரிய நிகழ்வாகும்.

கரூர் மாரியம்மன் கோவில் விழாவின்போது வேப்பமரத்தின் மூன்று கிளைகளை உடைய பகுதியை வெட்டி எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்வார்கள். பின்னர் அமராவதி ஆற்றில் வைத்து கம்பத்திற்கு வேப்பிலை, பூக்கள் உள்ளிட்டவற்றை கட்டி பூஜை செய்து, அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து, கோவிலில் நட்டு வைக்கப்படும்.

ஆலயத்தில் பலி பீடத்தின் அருகில் நடப்படும் இந்த கம்பத்தை பக்தர்கள் வணங்கி வழிபடுவார்கள். கம்பம் மாரியம்மன் ஆலயத்தில் இருக்கும் நாட்களில், தினமும் மாலை சாயரட்ச பூஜை நடக்கும். பக்தர்கள் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

தொடர்ந்து 15 நாட்களுக்கு அதிகாலை தொடங்கி இரவு இரவு வரை கம்பத்திற்கு காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யவும், சாமி தரிசனம் செய்யவும் தினந்தோறும் கூட்டம் அலை மோதும். 15 நாட்கள் பூஜைக்கு பிறகு கம்பம் ஆற்றில் விடும் நிகழ்வு விமரிசையாக நடைபெறும்.

ஆணவம், கண்மம், மாயை என்ற மூன்றையும் நீக்கக் கூடிய சக்தியாகவே கம்பம் கருதப்படுகிறது. இறைவன் ஏகன் அநேகன் என்பதை வலியுறுத்துவது கம்பம். கரூருக்கு மழை (மாரி) வளம் தரும் தெய்வமாக கரூர் மாரியம்மன் விளங்குகிறாள். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் கம்பம் திருவிழா அன்று கம்பம் நடுதலில் துவங்கி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு வரை அடிக்கடி மழை பெய்வது விழாவின் சிறப்பம்சம் ஆகும்.

இந்த ஆண்டுக்கான கம்பம் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு நாளை (புதன்கிழமை) மாலை 5.15 மணிக்கு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கோவிலில் தினசரி இரவு 7 மணிக்கு வாகன சேவை நடைபெறுகிறது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

1 More update

Next Story