ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

சில பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி கையில் ஏந்தியும் தீமிதித்தனர்.
ராசிபுரம் நாமக்கல் ரோட்டில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி தேர் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் ஐப்பசி திருத்தேர் பெருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. தினந்தோறும் ஒவ்வொரு சமூகத்தாரின் சார்பில் கட்டளை நடைபெற்று அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக்கினி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது. கோவில் பூசாரி அக்கினி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, முதலில் அவர் அக்கினி குண்டத்தில் தீ மிதித்தார். அவரைத் தொடர்ந்து, பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து வேப்பிலையை கையில் ஏந்தியபடி பயபக்தியுடன் தீ மிதித்தனர். சில பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் தீமிதித்தனர்.
தீமிதி நிகழ்வில் ஒரு பெண் தீக்காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அக்கினி குண்டம் இறங்கிய போது லேசாக மழை பெய்தது. வேண்டுதலை நிறைவேற்றியதற்காக பக்தர்கள் ஆடு கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலையில், விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






