திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா: சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா


திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா: சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா
x

ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 7-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

5.15 மணிக்கு உருகு சட்ட சேவைக்கு பின், சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு தங்கம் மற்றும் வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

மதியம் 1.45 மணிக்கு சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி, சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். அப்போது 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

வீதி உலா முடிந்து மேலக்கோவில் வந்த சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பந்தல் மண்டபம் முகப்பில் உள்ள வெள்ளை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

8-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், 10.30 மணிக்கு மேல் பச்சைநிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டு அணிந்து, பச்சைநிற மலர்கள் சூடி, பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

10-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story