திருப்பதி பிரம்மோற்சவ விழா.. சின்ன சேஷ வாகனத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி
வாகன வீதி உலாவிற்கு முன்னால் பல்வேறு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 3 மணி முதல் 3.30 மணி வரை மூலவருக்கு ‘சுப்ரபாத’ சேவை நடந்தது.
அதிகாலை 3.30 மணி முதல் காலை 10 மணிவரையிலும், காலை 11.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 9 முதல் இரவு 12 மணி வரையிலும் இலவச தரிசனத்தில் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை தங்கத்திருச்சி வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வாகன வீதி உலா முன்னால் சிவப்பு நிறத்தில் ‘கருடன்’ உருவம் அச்சிடப்பட்ட மஞ்சள் நிறத்திலான பிரம்மோற்சவ விழா கொடியை அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு வந்தனர்.
இதையடுத்து மாலை 5.43 மணி முதல் 6.15 மணிக்குள் மீன லக்னத்தில் வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பிரதான அர்ச்சகர்களும், கங்கணப்பட்டரும் சிறப்புப்பூஜைகளை செய்து தங்கக்கொடிமரத்தில் கருடன் உருவம் அச்சிடப்பட்ட பிரம்மோற்சவ விழா கொடியை பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க ஏற்றினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மூலவர் ஏழுமலையானுக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் ‘பட்டு வஸ்திரங்கள்’ மற்றும் மங்கல பொருட்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அவரின் தலையில் ‘பரிவட்டம்’ கட்டப்பட்டது.
ஒரு வெள்ளித்தட்டில் பட்டு வஸ்திரம், மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்ற மங்கலப் பொருட்கள் வைக்கப்பட்டன. பட்டு வஸ்திரம் வைக்கப்பட்ட வெள்ளித்தட்டை தலையில் சுமந்தவாறு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேடி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்கு வந்து மூலவர் ஏழுமலையானிடம் பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்களை சமர்ப்பித்து, சாமி தரிசனம் செய்தார்.
வாகன வீதிஉலா
பின்னர் வாகன மண்டபத்துக்கு உற்சவர்களை கொண்டு சென்று அலங்காரம் செய்யப்பட்டது. தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினர். இரவு 9 மணி முதல் 11 மணி வரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
இதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வாகன வீதிஉலாவில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
இன்று காலையில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தளுளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன வீதி உலாவிற்கு முன்னால் பல்வேறு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பல்வேறு கலைஞர்கள், பகவானின் அவதாரங்களை பிரதிபலிக்கும் வகையில் வேடமணிந்து வந்தனர். மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கான பக்தர்கள் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.








