பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: திருப்பதியில் கோலாகலமாக நடந்த தங்க தேரோட்டம்


பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: திருப்பதியில் கோலாகலமாக நடந்த தங்க தேரோட்டம்
x

உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை அனுமன் வாகன வீதிஉலா நடந்தது.

உற்சவர் மலையப்பசாமி வில், அம்பை கையில் ஏந்தியபடி ‘கோதண்டராமர்’ அலங்காரத்தில் தனது பக்தனான அனுமன் மீது எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து ‘ஜெய்.. ஸ்ரீராம்..’ எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை தங்கத்தேரோட்டம் நடந்தது. இதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்து அருள்பாலித்தனர்.

பின்னர் இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை தங்க யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவிலில் இன்று

பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடைபெற்றது. மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை 2-வது முறையாக உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

1 More update

Next Story