திருப்பதி பிரம்மோற்சவம்.. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து செல்லும் மாலை

திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாளன்று நடைபெறும் மோகினி அலங்கார சேவையும், கருடசேவையும் மிக பிரசித்தி பெற்றது.
திருப்பதி திருமலையில் இன்று பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்க உள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை இந்த உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். தினமும் வாகன சேவைகள் நடைபெறும். இதனைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம், தமிழகத்துடனும் தொடர்புடையது. ஆம்... விழாவின் 5-ம் நாளன்று நடைபெறும் மோகினி அலங்கார சேவையும், கருடசேவையும் மிக பிரசித்தி பெற்றது. அன்று காலை மலையப்பசாமி, மோகினி அலங்காரத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் கிளி அணிவிக்கப்பட்டு, வண்ணமயமான வஸ்திரங்கள் அணிந்து, மலர்கள் சூடி, ஜொலிக்கும் நகைகள் அணிந்து மைசூரு மகாராணி அளித்த பல்லக்கில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
கருடசேவையின் போது, தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் துளசி மாலை மூலவருக்கு (ஏழுமலையான்) அணிவிக்கப்படும். இந்த மாலையுடன் மூலவிக்ரகமூர்த்தி அணிந்திருக்கும் தங்க சங்கிலி மகரகண்டி, லட்சுமிஹாரம் போன்ற நகைகளை கருடசேவையின் போது மட்டும் உற்சவ மூர்த்தியான மலையப்பசாமிக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இதேபோல, கருட வாகனத்திற்கு 11 வெண் பட்டுக்குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது. இக்குடைகள் சென்னையில் இருந்து திருமலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தமிழ்நாட்டு மக்களின் சார்பில் அந்த திருக்குடைகள் ஏழுமலையானுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. மோகினி அலங்காரமும், கருடசேவையும் வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது.






