திருப்பதி பிரம்மோற்சவ விழா: முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி


திருப்பதி பிரம்மோற்சவ விழா: முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
x

வாகன வீதிஉலாவில் திருமலை ஜீயர் சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. தங்க முலாம் பூசப்பட்ட சிம்ம வாகனத்தில் யோக பட்டயம் அணிந்தவராக, கால்களை மடித்து குத்திட்டு அமர்ந்த கோலத்தில் உற்சவர் மலையப்பசாமி ‘யோக நரசிம்மர்’ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன வீதிஉலா முன்னால் 9 மாநிலங்களை சேர்ந்த 557 கலைஞர்கள் மொத்தம் 20 குழுக்களாக பங்கேற்று நாட்டியம், நடனம், இசை போன்ற கலாசார நிகழ்ச்சிகளை நடத்தினர். அதில் முக்கிய நடன நிகழ்ச்சிகளாக தெலுங்கானாவின் குஸ்ஸாடி நடனம், குஜராத்தின் திப்பாணி, மராட்டிய மாநிலத்தின் லாவணி, ஆந்திர கலைஞர்களின் பரத நாட்டியம், நவதுர்கா, குச்சிப்புடி, அசாமின் பிஹு நடனம், ஒடிசாவின் சம்பல்புரி நடனம், ஜார்கண்ட் மாநிலத்தின் டிரம் அக்ரோபாட்டிக்ஸ் கவுராசுர், கர்நாடகத்தின் வெங்கடேஸ்வர மகாத்மியம், மேற்கு வங்க மாநிலத்தின் தக் நடனம் போன்றவை பக்தர்களை கவர்ந்தன.

முத்துப்பந்தல் வாகன வீதிஉலா

இதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. இதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாகன வீதிஉலாவில் திருமலை ஜீயர் சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை கற்பக விருட்ச வாகன வீதிஉலா நடைபெற்றது. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.

1 More update

Next Story