திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: நாக வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா

சுவாமி வீதிஉலாவின்போது, பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: நாக வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று காலை 10 மணி அளவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், நாக வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன் பின்னர் நாக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி கற்பக விருட்சம், காமதேனு வாகனம் மற்றும் இதர வெள்ளி வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் கலையரங்கத்தில் பரதநாட்டியம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தீபத்திருவிழாவின் போது சாமி வெள்ளி பெரிய ரிஷப வாகனத்திலும், வெள்ளி ரதத்திலும் எழுந்தருளி மாடவீதி உலா வருவது முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சாமி வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) இரவு வெள்ளி ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com