வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்


வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்
x

தேரோட்டத்தைத் தொடர்ந்து இரவு மாவிளக்கு வழிபாடும், அம்மன் பிரியாவிடை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விருதுநகர்

வத்திராயிருப்பு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் முத்தாலம்மன் கோவில். இங்கு எழுந்தருளி இருக்கும் முத்தாலம்மனை, மழைக்கு அதிபதியாக இப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் இந்த அம்மனுக்கு ஒரு வார காலம் விழா எடுத்து வழிபடுவது வழக்கம். விழாவின் இறுதி நாளில் அம்மன் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். இந்த தேரோட்ட திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து கலந்து கொள்வார்கள். அன்று ஒருநாள் மட்டும் அம்மன், கோவிலில் உருவமாக எழுந்தருளி அருள்பாலிப்பார். மற்ற நாட்களில் பீடத்திற்கு மட்டுமே வழிபாடு நடைபெறும்.

அவ்வகையில், இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் கோவில் முன்புள்ள கலையரங்கில் கலை விழாவுடன் துவங்கியது. மதநல்லிணக்கத்தின் அடையாளமாக இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மத தலைவர்கள் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர். ஒவ்வொரு நாளும் இயல், இசை, நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள், முத்தமிழ் விழாக்கள் நடைபெற்றன.

விழாவின் இறுதி நாளான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அம்மன் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி அதிகாலையில் துவங்கியது. பக்தி கோஷம் முழங்க, அம்மனை தேரில் எழுந்தருளச் செய்ததும் தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று பிற்பகல் 3 மணி அளவில் நிலையம் வந்து சேர்ந்தது.

பக்தர்கள் மேளதாளம் முழங்க எதிர்சேவை செய்து அம்மனை வரவேற்று கோவிலில் எழுந்தருளச் செய்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் உருவச் சிலைகளை காணிக்கையாக செலுத்தியும், மஞ்சள் நீர் ஊற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். மாலையில் பக்தர்களின் மஞ்சள் நீராட்டு வைபவமும், இரவு மாவிளக்கு வழிபாடும், அம்மன் பிரியாவிடை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரியா விடை கொடுத்து கோவிலில் இருந்து புறப்படும் அம்மன், வெளியே வந்தவுடன் பக்தர்கள் மேளதாளம் முழங்க பூக்களை தூவியும் குலவையிட்டும் வழிபட்டு வழியனுப்பி வைப்பார்கள். பின்னர், அம்மனை ஆற்று நீரில் கரைப்பதற்காக பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.

1 More update

Next Story