விநாயகர் சதுர்த்தி: குமரி மாவட்டத்தில் 5,004 சிலைகள் வைக்க இந்து முன்னணி ஏற்பாடு

கோவில்கள், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் அகஸ்ட் மாதம் 27-ந்தேதி முதல் 30, 31-ந் தேதி வரை விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்து நீர்நிலைகளில் கரைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்து முன்னணி நெல்லை கோட்ட செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் 5,004 விநாயகர் சிலைகளை இந்து கிராம கோவில்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் அகஸ்ட் மாதம் 27-ந்தேதி முதல் 30, 31-ந் தேதி (சனி, ஞாயிற்றுக்கிழமை) வரை பூஜையில் வைத்து பின்னர் கடலிலும், ஆறுகளிலும், நீர்நிலைகள் மற்றும் அருவிகளில் வழக்கம்போல் கரைக்க உள்ளோம்.
30-ந் தேதி மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவில் முன்பு காலை 8.30 மணிக்கு ஊர்வலம் தொடங்கி மாலை 5.30 மணிக்கு சின்னவிளை கடலில் சிலைகள் கரைக்கப்படும். 31-ந் தேதி ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து மதியம் 2.30 மணிக்கு ஊர்வலம் தொடங்கி, மாலை 6 மணிக்கு சங்குத்துறை கடலில் சிலைகள் கரைப்பு நடைபெறும். தோவாளை ஒன்றியத்தில் தோவாளை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு ஞாலம் பள்ளிகொண்டான் தடுப்புஅணையில் சிலைகள் கரைக்கப்படும்.
அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில் முன்பிருந்து பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலம் தொடங்கி மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சிலைகள் கரைப்பு நடைபெறும். குருந்தன்கோடு ஒன்றியம் மற்றும் குளச்சல் நகரம் சார்பில் திங்கள்சந்தை ராதாகிருஷ்ணன் கோவில் முன்பிருந்து காலை 9 மணிக்கு ஊர்வலம் தொடங்கி மதியம் 12 மணிக்கு மண்டைக்காடு கடலில் சிலைகள் கரைக்கப்படும்.
தக்கலை ஒன்றியம்- பத்மநாபபுரம் நகரம் சார்பில் வைகுண்டபுரம் ஸ்ரீராமர் கோவிலில் இருந்து மதியம் 12 மணிக்கு ஊர்வலம் தொடங்கி மாலை 5 மணிக்கு மண்டைக்காடு கடலில் சிலைகள் கரைக்கப்படும். திருவட்டார் ஒன்றியம் சார்பில் செருப்பாலூர் முத்தாரம்மன் கோவிலில் இருந்து காலை 10 மணிக்கு ஊர்வலம் தொடங்கி மதியம் 1 மணிக்கு திற்பரப்பு அருவியில் சிலைகள் கரைப்பு நடைபெறும். கிள்ளியூர் ஒன்றியம் சார்பில் கருங்கல் கூனாலுமூடு தர்மசாஸ்தா கோவிலில் இருந்து காலை 10 மணிக்கு ஊர்வலம் தொடங்கி மாலை 4 மணிக்கு மிடாலம் கடலில் சிலைகள் கரைக்கப்படும்.
முன்சிறை ஒன்றியம் கொல்லங்கோடு நகரம் சார்பில் அஞ்சுகண்ணுகலுங்கு மாடன் தர்மபுரான் இசக்கி அம்மன் கோவிலில் இருந்து மதியம் 2 மணிக்கு ஊர்வலம் தொடங்கி மாலை 5 மணிக்கு தேங்காப்பட்டணம் கடலில் சிலைகள் கரைப்பு நடைபெறும். மேல்புறம் ஒன்றியம் மேல்புறம் அளப்பன்கோடு ஈஸ்வரன் கால பூதத்தான் கோவிலில் இருந்து காலை 10 மணிக்கு ஊர்வலம் தொடங்கி மதியம் 1 மணிக்கு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சிலைகள் கரைப்பு நடைபெறும். குழித்துறை நகரம் சார்பில் பம்மம் பகுதியில் இருந்து காலை 10 மணிக்கு ஊர்வலம் தொடங்கி மதியம் 1 மணிக்கு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சிலைகள் கரைப்பு நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






