கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,164 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை தெருக்களில் வைத்து வழிபட கடந்த சில நாட்களாக விழாக்குழுவினர் போலீசாரிடம் அனுமதி கேட்டு முன்பதிவு செய்தனர். இதில் பிரச்சினைக்குரிய இடங்களில் மட்டும் சிலைகள் வைத்து வழிபட போலீசார் அனுமதி மறுத்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,164 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து விழாக்குழுவினர் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்பட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வாங்கி, பிரதிஷ்டை செய்வதற்காக வாகனங்கள் மூலம் தங்கள் பகுதியில் உள்ள இடங்களுக்கு மேள தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
பின்னர் சதுர்த்தி தினமான இன்று காலை முதல் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை செய்தனர். , சுண்டல், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், ஆப்பிள், திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழ வகைகளை படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
மேலும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பழ வகைகள், சர்க்கரை பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, பொரி ஆகியவற்றை படையலிட்டும் விநாயகரை குடும்பத்துடன் வழிபட்டனர். மேலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள கற்பக விநாயகர், சுந்தர விநாயகர், கோட்டைமேடு செல்வ விநாயகர் உள்பட பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொது இடங்கள் மற்றும் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் அனைத்தும் நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளன. விநாயகர் சதுர்த்தியையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மாதவன் மேற்பார்வையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






